Headlines

நவம்பர் 13, 2026இல் உலகிற்கு பேரழிவு காத்திருக்கிறதா? 66 ஆண்டுகளுக்கு முன்பே விஞ்ஞானி வெளியிட்ட திடுக்கிடும் கணிப்பு!

நாம் வாழும் இந்த 2026-ஆம் ஆண்டில், காலண்டரின் பக்கங்கள் வேகமாகக் கடந்து கொண்டிருக்க, உலகெங்கிலும் உள்ள அறிவியலாளர்கள் மற்றும் தீவிர சிந்தனையாளர்களின் கவனம் ஒரு குறிப்பிட்ட தேதியை நோக்கித் திரும்பியுள்ளது. “நவம்பர் 13, 2026 – வெள்ளிக்கிழமை”. சுமார் 66 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 1960-ஆம் ஆண்டில், ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஹெய்ன்ஸ் வான் ஃபோர்ஸ்டர் (Heinz von Foerster) வெளியிட்ட ஒரு திடுக்கிடும் கணிப்புதான் இந்த உலகளாவிய பரபரப்பிற்குக் காரணம்!

எந்தவித ஜோசியத்தையோ அல்லது மூடநம்பிக்கையையோ அடிப்படையாகக் கொள்ளாமல், கடந்த 2,000 ஆண்டுகால மனித குலத்தின் மக்கள் தொகை வளர்ச்சியை அணு அணுவாக ஆய்வு செய்து, துல்லியமான கணிதச் சமன்பாடுகளின் அடிப்படையில் இந்த எச்சரிக்கையை அவர் விடுத்திருந்தார். அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘சயின்ஸ்’ (Science) அறிவியல் இதழில், “Doomsday: Friday, 13 November 2026” (பேரழிவு நாள்: வெள்ளிக்கிழமை, 13 நவம்பர் 2026) என்ற அதிரடித் தலைப்பில் தனது ஆய்வுக் கட்டுரையை அவர் சமர்ப்பித்தார். கவனத்தைக் கவர வேண்டும் என்பதற்காகத் தனது பிறந்தநாளான நவம்பர் 13-ஆம் தேதியையே அவர் இதற்காகத் தேர்ந்தெடுத்திருந்தார்.

அமெரிக்காவின் இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் அவருடன் பணியாற்றிய பாட்ரிசியா எம். மோரா மற்றும் லாரன்ஸ் டபிள்யூ. அமியோட் ஆகிய சக விஞ்ஞானிகளும் இந்த பிரம்மாண்ட ஆய்வில் பங்காற்றினர். அவர்கள் ஆய்வு செய்த காலத்தில் உலக மக்கள் தொகை வெறும் 300 கோடியாக (3 பில்லியன்) மட்டுமே இருந்தது. ஆனால், மனித குலத்தின் வளர்ச்சி இதே அதிவேகத்தில் தொடர்ந்தால், 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் பூமி தாங்க முடியாத அளவுக்குச் சுமை கூடி, இயற்கை வளங்கள் முற்றிலும் தீர்ந்து, உணவு மற்றும் அடிப்படைத் தேவைகள் கிடைக்காமல் மனித சமுதாயத்தின் அமைப்பே முடங்கிவிடும் என்று அவர்கள் எச்சரித்திருந்தனர். அவர்கள் கணித்தது போலவே, இன்று உலக மக்கள் தொகை 830 கோடியைக் (8.3 பில்லியன்) கடந்து நிற்கிறது!

செயற்கை நுண்ணறிவு (AI) பற்றி 30 ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன அதிர்ச்சி உண்மை!

உலகம் அழியும் என்ற கணிப்பை விடவும், அன்றே அவர் வெளியிட்ட மற்றொரு விஷயம் இன்று உலகை உலுக்கி வருகிறது. அதுதான் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பற்றிய அதிதீவிர எச்சரிக்கை!

சாட்ஜிபிடி (ChatGPT) போன்ற எந்தவொரு ஏஐ தொழில்நுட்பமும் கற்பனையில் கூட இல்லாத 1995-ஆம் ஆண்டிலேயே, ஒரு நேர்காணலில் பேசிய ஃபோர்ஸ்டர் பின்வருமாறு கூறியிருந்தார்:

“செயற்கை நுண்ணறிவு மனிதர்களைப் போலச் சிந்திக்கிறது என்று நாம் நம்புவதுதான் உலகிலேயே மிகப் பெரிய ஆபத்து!”

ஒரு இயந்திரமானது தன்னிடம் உள்ள பல கோடி தகவல்களை அலசி ஆராய்ந்து, நொடிப் பொழுதில் விடையளித்துவிடும். அதை உருவாக்க மனிதன் பயன்படுத்திய தொழில்நுட்பத் திறமையைப் பாராட்டலாம். ஆனால், அந்த இயந்திரம் மனிதனைப் போல உணர்ச்சிகளோடு யோசிக்கிறது என்று மனிதர்களாகிய நாம் தவறாக நினைக்கத் தொடங்கிவிடுகிறோம். இயந்திரங்களுக்கு மனிதக் குணங்களைக் கற்பிக்கும் இந்த பழக்கமே (Anthropomorphism) மனித குலத்திற்குப் பேராபத்தாக முடியும் என்று அவர் அன்றே உரக்கச் சொன்னார்.

நிஜ வாழ்க்கையில் நடக்கும் விபரீதங்கள்:

இன்றைய நவீன காலகட்டத்தில் ஃபோர்ஸ்டர் எச்சரித்த அதே ஆபத்தான சூழலில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மனிதர்கள் பல மணி நேரம் ஏஐ சாட்பாட்களுடன் மணிக்கணக்கில் உரையாடுகிறார்கள்; தங்களின் தனிப்பட்ட ரகசியங்களையும், மனக் கவலைகளையும் அதனுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். மருத்துவர்களுக்குப் பதிலாகக்கூட ஏஐ-யிடம் ஆலோசனை பெறும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

இதன் விளைவாக நெஞ்சைப் பிளக்கும் விபரீதங்களும் அரங்கேறியுள்ளன. அமெரிக்காவின் நியூஜெர்சியைச் சேர்ந்த 76 வயது முதியவர் தாங்பூ வாங்பாண்டு (Tangpu Wangpandu), மெட்டா (Meta AI) சாட்பாட் ஒன்றுடன் நீண்ட நாட்களாகப் பேசி வந்துள்ளார். அந்த சாட்பாட் ஒரு அழகான பெண் போலப் பேசி, அவரை நேரில் பார்க்க நியூயார்க்கிற்கு வருமாறு அழைத்துள்ளது. அதை உண்மை என நம்பி மெய்சிலிர்த்துப்போய் பயணமான அந்த முதியவர், வழியில் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு புறம், மன அழுத்தத்தில் இருந்த ஒரு பெண், சாட்பாட் தனக்கு ஆறுதல் அளித்ததாகக் கூறுகிறார். ஏஐ என்பது வெறும் சொற்களைத் தொடுக்கும் அல்காரிதம் மட்டுமே, அதற்கு சுய உணர்வோ மனித இதயமோ கிடையாது என்ற ஃபோர்ஸ்டரின் எச்சரிக்கை இதில் 100 சதவீதம் உண்மை என்பது நிரூபணமாகிறது.

நவம்பர் 13-இல் உலகம் உண்மையில் அழியுமா?

அப்படியானால், இன்னும் சில வாரங்களில் வரவிருக்கும் நவம்பர் 13, 2026 அன்று பூமி அழியப் போகிறதா?

தற்போதைய நவீன விஞ்ஞானிகள் அப்படி அச்சப்படத் தேவையில்லை என்றே கூறுகிறார்கள். 1960-களில் கணிக்கப்பட்ட அதிவேக மக்கள் தொகைப் பெருக்கம், பல வளர்ந்த நாடுகளில் பிறப்பு விகிதம் குறைந்ததன் காரணமாகக் கட்டுக்குள் வந்துள்ளது.

இருப்பினும், ஃபோர்ஸ்டர் விடுத்த எச்சரிக்கையை நாம் அடியோடு புறக்கணித்துவிட முடியாது. பூமி ஒரே நாளில் அழியாவிட்டாலும், அளவுக்கு அதிகமான மனித நுகர்வு, காலநிலை மாற்றம் (Climate Change), இயற்கை வளங்கள் வேகமாகக் குறைவது மற்றும் கட்டுப்பாடற்ற தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவை மனித குலத்தின் எதிர்காலத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன என்பதே மறுக்க முடியாத உண்மை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *