அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்க தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அதற்கான அமைச்சரவைப் பத்திரம் நாளை (28) சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
கம்பஹாவில் இன்று (27) நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இந்த நிவாரணத் திட்டத்திற்காக 41 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அதற்கமைய அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்கப்படும் என்றார்.
எரிபொருள் விலைகள் மற்றும் வீட்டுச் செலவுகள் மீதான தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகளாவிய ரீதியில் எரிபொருள் மற்றும் எரிசக்தி விலைகள் அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கத்தை கையாள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் இலங்கையுடனான கலந்துரையாடலின் போது, எரிபொருள் மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு பதிலளிக்கும் வகையில் வழங்கப்படும் நிதியுதவிகள் தற்காலிகமானதாகவும், பாதிக்கப்படக்கூடிய குழுக்களை இலக்காகக் கொண்டதாகவும், கவனமாக கணக்கிடப்பட்டதாகவும் இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியிருந்தது.
கம்பஹா பேரணியில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி திஸாநாயக்க, அரசியல் எதிராளிகளின் கூற்றுக்களுக்கு மத்தியிலும் மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகக் குறிப்பிட்டார். அரசியல் அதிகாரம் இறுதியில் மக்களிடமே உள்ளது என்றும், மக்கள் ஆதரவு இருக்கும் வரை அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் ஊழல் விசாரணைகள் அரசியல் பழிவாங்கல் என்ற குற்றச்சாட்டுக்களையும் ஜனாதிபதி நிராகரித்தார். தனிநபர்களுக்கு எதிராக பழிவாங்கும் எண்ணம் இல்லை என்று தெரிவித்த அவர், சில விசாரணைகள் சிக்கலானவை மற்றும் சர்வதேச உதவி தேவைப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.
