நவீன சமூக மற்றும் தொழில்நுட்ப சவால்களுக்கு மத்தியில் சிறுவர்களின் உளவியல் பாதுகாப்பு, மனநலம் மற்றும் தன்னம்பிக்கையை உறுதி செய்வது மிகவும் முக்கியமானது எனவும், அரசாங்கம் இந்த விடயத்திற்கு முன்னுரிமை அளித்துள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் வழிகாட்டலின் கீழ், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தினால் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட கேட்போர் கூடத்தில் இன்று (ஒக்டோபர் 01) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய சிறுவர் தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
“மனதளவில் வலிமையான, ஆற்றல்மிக்க சிறுவர்கள்” (Mentally Strong, Children Empowered) என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியதாவது: கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் பலன்களை சிறுவர்கள் பெறுவதை உறுதி செய்வதற்கும், இணையவழி அச்சுறுத்தல்கள் மற்றும் தவறான உள்ளடக்கங்களால் ஏற்படும் வன்முறைகள் மற்றும் அழுத்தங்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கும் அவசியமான சட்ட மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளை அரசாங்கம் வலுப்படுத்தி வருகிறது. சிறுவர்களை உடல் ரீதியாக தண்டிப்பது மற்றும் உளவியல் ரீதியாகத் துன்புறுத்துவதைத் தடுப்பதற்கான சீர்திருத்தங்களை நாங்கள் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.
அத்துடன், சிறுவர்களைப் பொருளாதாரச் சுரண்டலில் இருந்து பாதுகாக்கும் நோக்கில், அபாயகரமான தொழில்களில் சிறுவர்களை ஈடுபடுத்துவோருக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து 1,00,000 ரூபாவாக அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. முன்பள்ளிக் கல்வியை ஒரே தேசிய தரநிலையின் கீழ் முறைப்படுத்துதல், ஆசிரியர்களுக்கான தொழில்சார் தகைமைகள் மற்றும் பயிற்சிகளைக் கட்டாயமாக்குதல் போன்ற புதிய சீர்திருத்தங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. சிறுவர் பருவத்தில் அவர்களை எழுத்துக்கள் மற்றும் எண்களை எழுதக் கட்டாயப்படுத்துவதை விட, விளையாட்டுக்கள் ஊடாக சமூகத் திறன்களையும் ஆளுமையையும் வளர்ப்பது மிக முக்கியமாகும் என பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், “பெரியவர்களாகிய நாம் சிறுவர்களுக்கு அறிவுரை கூறுவது மட்டுமன்றி, அவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகவும் செயற்பட வேண்டும். பாடப் புத்தகங்களுக்கு அப்பால் வாழ்க்கையைப் பற்றிச் சிறுவர்களுக்குக் கற்றுக்கொடுக்குமாறு ஆசிரியர்களை நான் கேட்டுக்கொள்கின்றேன். நாம் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு அக்கறையுடன் செயற்பட்டால் மாத்திரமே எமது சமூகத்தில் காணப்படும் வன்முறை மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்” எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர் விவகாரப் பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்சன, நாடாளுமன்ற உறுப்பினர் அருண பனகொட, ஹோமாகம பிரதேச சபையின் தலைவர் கசுன் ரத்நாயக்க, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் தரங்கனி விக்கிரமசிங்க உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
