Headlines

ஆசிய விளையாட்டு தங்கம் யாருக்கு? இந்தியா – பாகிஸ்தான் மகா யுத்தத்திற்கு தயாராகும் ஜப்பான் மைதானம்!

ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஆண்கள் கிரிக்கெட்டுக்கான தங்கப் பதக்க இறுதிப்போட்டியில், பாரம்பரிய பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த மகா யுத்தம் நடைபெறவுள்ள நிஷின் நகரின் கோரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தின் ஆடுகள நிலவரம் எப்படி? யாருக்கு சாதகமாக இருக்கும்? என்ற அலசலை இங்கு பார்ப்போம்.

ஆடுகளத்தின் தன்மை: சுழற்பந்து வீச்சாளர்களின் சொர்க்கம்!

மைதானத்தின் ஆடுகளம் ஜப்பானில் பெய்த தொடர் மழையால் அதன் அடிப்புறத்தில் ஈரப்பதத்தைக் கொண்டுள்ளது. தற்போது வெயில் அடிப்பதால், ஆடுகளத்தில் பந்து சீரற்ற முறையில் எழும்ப வாய்ப்புள்ளது. இது குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மிகப்பெரிய சாதகமாக அமையும். பந்து நன்றாக சுழன்று திரும்பும் என்பதால், பேட்டர்கள் ரன் குவிப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

இந்த இறுதிப்போட்டியில், இரு அணிகளின் சுழற்பந்து வீச்சாளர்கள் வீசப்போகும் 12 முதல் 16 ஓவர்களே தங்கப் பதக்கம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும். இந்திய அணியில் அனுபவமிக்க சுழற்பந்து வீச்சாளர்களான அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். தேவைப்பட்டால் அபிஷேக் சர்மாவும் சுழற்பந்து வீசி நெருக்கடி கொடுக்கலாம். வேகப்பந்து வீச்சில் ஆடுகளத்தின் தன்மையை தாண்டி எந்த சூழலிலும் விக்கெட் வீழ்த்தும் ஜஸ்பிரித் பும்ரா இருப்பது இந்தியாவிற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.

மறுபுறம் பாகிஸ்தான் அணி அப்ரார் அகமது மற்றும் சுபியான் முகீம் ஆகிய முன்னணி ரிஸ்ட் ஸ்பின்னர்களை பெரிதும் நம்பியுள்ளது. அவர்களுக்கு உறுதுணையாக சைம் அயூப் மற்றும் அராபத் மின்ஹாஸ் ஆகியோர் சுழற்பந்து வீசுவர்.

பேட்டிங் வரிசையில் யாருக்கு சாதகம்?

பேட்டிங் பலத்தை ஒப்பிடுகையில் இந்திய அணியே அதிக பலத்துடன் திகழ்கிறது. அதிரடிக்கு போன அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி, அனுபவம் வாய்ந்த சஞ்சு சாம்சன், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், அரையிறுதியில் 80 ரன்கள் விளாசிய இஷான் கிஷன், ஆசிய கோப்பை நாயகன் திலக் வர்மா மற்றும் சிவம் துபே என சிறந்த வீரர்கள் வரிசைகட்டி நிற்கின்றனர்.

பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பெரும்பாலும் கேப்டன் சாகிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், ஹசன் நவாஸ் மற்றும் அப்துல் சமத் ஆகியோரைச் சுற்றியே அமைந்துள்ளது.

இந்தியாவுக்கு கூடுதல் அழுத்தம்

பாகிஸ்தானின் இளம் அணியை எதிர்த்து, முழு பலம் கொண்ட இந்திய அணி களமிறங்குவதால் இந்திய அணிக்கு கூடுதல் அழுத்தம் உள்ளது. வெற்றி பெற்று தங்கம் வென்றால் அது வழக்கமான ஒன்றாக பார்க்கப்படும்; ஆனால் ஒரு சிறிய தவறு நேர்ந்தாலும் அது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து பயிற்சியாளர் விவிஎஸ் லட்சுமணன் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியை தீவிரமாக தயார்படுத்தி வருகின்றனர்.

இரு அணிகளின் முழு விவரம்:

இந்திய அணி: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், திலக் வர்மா, சிவம் துபே, ஜஸ்பிரித் பும்ரா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், விப்ராஜ் நிகம், யாஷ் தாக்குர், அர்ஷ்தீப் சிங்.

பாகிஸ்தான் அணி: சாகிப்சாதா ஃபர்ஹான் (கேப்டன்), சைம் அயூப், மாஸ் சதகத், உஸ்மான் கான், ஹசன் நவாஸ், அப்துல் சமத், அராபத் மின்ஹாஸ், முகமது வசீம் ஜூனியர், அகமது தானியல், சுபியான் முகீம், அப்ரார் அகமது, அகீப் ஜாவேத், அலி ரசா, சாத் மசூத், ஹைதர் அலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *