Headlines

ஷிரந்தி ராஜபக்ஷவின் முன் பிணை மனு: FCID பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள முன் பிணை (Anticipatory Bail) மனு தொடர்பில், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் (FCID) பொறுப்பதிகாரியை (OIC) எதிர்வரும் ஒக்டோபர் 12 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை (Notice) விடுத்துள்ளது.

‘சிரிளிய சவிய’ (Siriliya Saviya) அமைப்பின் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் அதன் கணக்கு விவகாரங்கள் தொடர்பில் FCID முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான விசாரணைகளுக்கு அமைவாகவே இந்த பிணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ள ஷிரந்தி ராஜபக்ஷ, சிகிச்சை முடிந்து நாடு திரும்பும் போது விமான நிலையத்தில் வைத்துத் தான் கைது செய்யப்படலாம் என அச்சம் வெளியிட்டு, தனது சட்டத்தரணிகள் ஊடாக இந்த முன் பிணை மனுவை தாக்கல் செய்துள்ளார்.

ஷிரந்தி ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் இயங்கிய ‘சிரிளிய சவிய’ அமைப்பின் கணக்குகள் மற்றும் அதனூடாக இடம்பெற்றதாகக் கூறப்படும் சந்தேகத்திற்கிடமான நிதி பரிவர்த்தனைகள் தொடர்பில் FCID நீண்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக FCID இல் ஆஜராகுமாறு அவருக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் மேலதிக கால அவகாசம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *