சென்னை: தமிழக அரசியல் களத்தில் ரஜினி, கமல் எனப் பல ஆளுமைகள் அரசியலுக்கு வந்தாலும், வந்த வேகத்திலேயே ஆட்சிக் கட்டிலைப் பிடித்து, அசுர பலத்துடன் அமர்ந்திருப்பவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், தற்போதைய முதலமைச்சர் விஜய். நிர்வாக அனுபவம் இல்லை என்று விமர்சித்தவர்களுக்கு மத்தியில், மிகக் குறுகிய காலத்தில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டது மட்டுமின்றி, இப்போது தேசிய அரசியலிலும் புயலைக் கிளப்பத் தொடங்கியுள்ளார் விஜய்.
2029 நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து, கட்சியின் பெயரை ‘தேசிய வெற்றி கழகம்’ என மாற்றி, வட மாநிலங்களிலும் தவெகவின் கொடியைப் பறக்கவிட விஜய் வியூகம் அமைத்து வருகிறார். அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியினர் வட மாநிலங்களில் இந்தியில் வெளியிடும் வீடியோக்கள் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. இது, தேசிய அளவில் ராகுல் காந்தியை மட்டுமே பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி வரும் டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பூகம்பத்தைக் கிளப்பிய ‘மூட் ஆஃப் தி நேஷன்’ கருத்துக்கணிப்பு
சமீபத்தில் வெளியான ‘மூட் ஆஃப் தி நேஷன்’ கருத்துக்கணிப்பில், விஜய் 9.2 சதவீத ஆதரவுடன் தேசிய அளவில் 3-வது இடத்தைப் பிடித்தது காங்கிரஸ் மேலிடத்தை நிலைகுலைய வைத்துள்ளது. தேசிய அரசியலில் ராகுல் காந்திக்கு ஒரு வலுவான, இளம் மாற்றுத் தலைவராக விஜய் உருவெடுத்து வருவதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
விஜய்யின் அதிகார மையத்தில் காங்கிரஸ் தூதர்கள்
விஜய்யின் இந்த அதிரடி நகர்வுகளை முடக்கவும், அவருக்கு ‘வாய்ப்பூட்டு’ போடவும் ராகுல் காந்தியின் நேரடித் தூதர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூரும், மாநிலங்களவை எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தியும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்தனர்.
தலைமைச் செயலகத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர்கள், தவெக அரசுக்குத் தாங்கள் அளித்து வரும் ஆதரவைச் சுட்டிக்காட்டி, ராகுல் காந்தியின் கோபத்தையும், கவலையையும் அடுக்கினர். குறிப்பாக, வட மாநிலங்களில் விஜய்யை அடுத்த பிரதமர் என முன்னிறுத்தி நடத்தப்படும் பிரச்சாரங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் ஆதரவை வாபஸ் பெற நேரிடும் என்றும் மறைமுக எச்சரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது.
அனுபவத்தைக் கடந்து நிற்கும் ஆளுமை: விஜய்யின் ‘மாஸ்’ அணுகுமுறை
ஆனால், இந்தச் சந்திப்பில் முதலமைச்சர் விஜய் கையாண்ட விதம், அவர் அரசியல் அனுபவத்தைக் கடந்து, ஒரு மிகப்பெரிய அதிகார மையமாகத் தன்னை உணர்ந்திருக்கிறார் என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டியுள்ளது.
காங்கிரஸ் தலைவர்கள் குமுறிக் கொண்டிருந்தபோது, விஜய் அவர்களைப் பேசவிட்டு, அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். அவர்கள் பேசிய எதையும் காதுகொடுத்துக் கேட்கக்கூட அவருக்குத் துளி விருப்பமில்லை என்பதை அவரது உடல்மொழி காட்டியதாகக் கூறப்படுகிறது. ஒரு பெரிய மாநிலத்தின் முதலமைச்சர் என்ற தோரணையில், டெல்லியில் இருந்து வந்த தூதர்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், அவர்கள் பேசி முடித்ததும் மிகச் சாதாரணமாக “வீட்டில் எல்லோரும் நலமா? சாப்பிட்டீங்களா?” என்று கேட்டு, அவர்களை அனுப்பி வைத்துள்ளார்.
காங்கிரஸின் புகார்களை ‘டோன்ட் கேர்’ செய்யும் அசுர பலம்
காங்கிரஸ் தூதர்களை சந்தித்த பிறகு, தவெக தலைமை அந்தச் சந்திப்பு குறித்து எந்தவித விளக்கமும் அளிக்காமல், அலட்சியமான அணுகுமுறையையே வெளிப்படுத்தியது. ராகுல் காந்தியை ஏற்காவிட்டால் அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் எனத் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கூச்சலிட்ட பிறகும், விஜய் அதைப் பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
இதற்குப் பின்னால் தெளிவான அரசியல் எதார்த்தம் இருப்பதை விஜய் நன்கு அறிவார். திமுக கூட்டணியில் இருந்த 22 கட்சிகளின் பலத்தையும், காங்கிரஸின் எதிர்ப்பையும் மீறித்தான் தனித்து 35% வாக்குகளைப் பெற்று விஜய் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துள்ளார். எனவே, காங்கிரஸின் தயவாலோ அல்லது ராகுல் காந்தியின் செல்வாக்காலோ தாங்கள் ஆட்சிக்கு வரவில்லை என்பதில் விஜய் மிக உறுதியாக இருக்கிறார்.
டெல்லிக்கு அனுப்பப்பட்ட நேரடிச் செய்தி
விஜய்யின் இந்த கள்ள மௌனமும், காங்கிரஸை எளிதாகக் கையாளும் போக்கும் டெல்லி மேலிடத்திற்கு ஒரு தெளிவான செய்தியை உணர்த்தியுள்ளது. தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைக்க காங்கிரஸின் ஆதரவு தவெகவுக்குத் தேவைப்பட்டாலும், தேசிய அரசியலில் ராகுல் காந்தியின் நிபந்தனைகளுக்கு அடிபணிய விஜய் தயாராக இல்லை.
பழைய கூட்டணிக் கட்சியான திமுக, ராகுல் காந்தியை எந்தவித நிபந்தனையுமின்றி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியதைப் போல, தவெக ஒருபோதும் காங்கிரஸின் பின்னால் கைகட்டி நிற்காது என்பதை விஜய் தனது அணுகுமுறை மூலம் மிக அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். அனுபவம் இல்லை என்று விமர்சித்தவர்கள் மத்தியில், தேசிய அரசியலின் மிகப்பெரிய கட்சியான காங்கிரசை மிக லாவகமாகக் கையாண்டு, தனது அதிகார பலத்தைக் காட்டியுள்ளார் முதலமைச்சர் விஜய்.
