Headlines

இஸ்ரேல் சுதந்திர தினத்தில் ஒளியேற்ற இந்திய விமானி ஸ்மித் மிச்சாருக்கு அழைப்பு; நெதன்யாகுவின் நெகிழ்ச்சியான உரையாடல்.

துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற விமானத்தைக் கடத்த முயன்ற துணை விமானியிடம் இருந்து 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மிச்சாருக்கு உலகம் முழுவதிலுமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்.

வரலாறு காணாத கௌரவம்:

ஸ்மித் மிச்சாரிடம் தொலைபேசியில் உரையாடிய நெதன்யாகு, “இந்தியா, இஸ்ரேல் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்திற்கும் நீங்கள்தான் உண்மையான ஹீரோ” எனப் புகழ்ந்து தள்ளினார். அத்துடன், எதிர்வரும் இஸ்ரேலின் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு ‘தீப ஒளியேற்றி’ (Lighting the torch) சிறப்பிக்குமாறு அவருக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.

வழக்கமாக இந்த உயரிய கௌரவம் இஸ்ரேலிய குடிமக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் ஒரு பெரும் பேறாகும். ஆனால், “இந்த அசாதாரண சூழ்நிலையில் எங்கள் நாட்டு மக்கள் அனைவரும் உங்களை அன்புடன் அரவணைத்துக் கொள்வார்கள்” என நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

நடுவானில் அரங்கேறிய திகில்:

கடந்த 30ஆம் திகதி பிளை துபாய் (Fly Dubai) நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் 174 பயணிகளுடன் நடுவானில் பறந்துகொண்டிருந்த போதே இந்த அதிரடித் திகில் சம்பவம் அரங்கேறியது. ஓமனைச் சேர்ந்த துணை விமானியான ஹமாம் அல் ஹம்மாமி, திடீரென ஒரு சிறிய கோடாரி போன்ற ஆயுதத்தால் கேப்டன் ஸ்மித் மிச்சார் மீது கொடூரத் தாக்குதல் நடத்தி, விமானத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றார்.

படுகாயமடைந்த நிலையிலும் அசாத்திய துணிச்சலுடன் போராடிய ஸ்மித் மிச்சார், துணை விமானியின் சதியை தனி ஒருவனாக முறியடித்தார். சாதுரியமாகச் செயல்பட்டு காக்பிட் (Cockpit) அறையின் கதவைத் திறந்த அவர், பயணிகளின் உதவியைக் கோரினார். உடனடியாகச் செயல்பட்ட பயணிகள், தாக்குதல் நடத்திய துணை விமானியை மடக்கிப் பிடித்தனர். இதனையடுத்து விமானம் சவுதி அரேபியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

வியந்து பாராட்டிய உலகத் தலைவர்கள்:

குஜராத்தைச் சேர்ந்த கேப்டன் ஸ்மித் மிச்சார் தற்போது அபுதாபியில் உள்ள மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரின் இந்த வீரதீரச் செயலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரும் ஏற்கனவே வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

ஸ்மித்திடம் நலம் விசாரித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “உங்கள் துணிச்சலும், அந்த இக்கட்டான சூழ்நிலையை நீங்கள் மிக நிதானமாகக் கையாண்ட விதமும் என்னை உண்மையிலேயே வியக்க வைக்கிறது. நீங்கள் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளீர்கள். எனது மற்றும் என் மனைவியின் சார்பில் உங்கள் குடும்பத்தினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *