கொழும்பு செட்டித்தெரு (Sea Street) பகுதியில் பொலிஸாரின் நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்களும் வர்த்தகர்களும் இணைந்து பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
நகை வியாபாரி ஒருவர் பொலிஸாரால் வீதியில் வைத்துத் தாக்கப்பட்டு, வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்தே இந்தப் போராட்டம் வெடித்துள்ளது. பொலிஸாரின் இந்த அராஜகச் செயலைத் தெளிவாகக் காட்டும் சிசிரிவி (CCTV) காணொளிக் காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்தச் சம்பவத்தையடுத்து, பொலிஸாரின் அத்துமீறிய நடவடிக்கையினைக் கண்டித்து செட்டித்தெருவில் உள்ள நகை வியாபாரிகள், நகைக் கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் வீதிகளில் ஒன்றுகூடி தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறித்த நகை வியாபாரி மீது பொலிஸார் தாக்குதல் நடத்தும் சிசிரிவி காட்சிகள் ஆதாரமாகப் பதிவாகியுள்ளதால், பொலிஸாருக்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்பு நிலை அப்பகுதியில் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கொழும்பு செட்டித்தெரு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தற்போது பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
