Headlines

சற்று முன்னர் அதிரடி: முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ கைது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, சற்று முன்னர் இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (07) காலை கிருலப்பனையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவரிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்தே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான விசாரணைகளின் ஒரு பகுதியாகவே, இந்த விசாரணை மற்றும் கைது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பின்னணி விபரம்:

சிகிச்சைக்காக கடந்த செப்டெம்பர் 16 ஆம் திகதி சிங்கப்பூர் சென்றிருந்த ஷிரந்தி ராஜபக்ஷ, மலேசியாவிலிருந்து கடந்த திங்கட்கிழமை (05) இரவு இலங்கை திரும்பியிருந்தார். அவர் நாடு திரும்பிய நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக, ‘சிரிளிய சவிய’ (Siriliya Saviya) அமைப்பின் நிதி விவகாரம் தொடர்பான விசாரணைகளில் தம்மைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி, ஷிரந்தி ராஜபக்ஷவின் சட்டத்தரணிகளால் கடந்த திங்கட்கிழமை (05) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன் பிணை (Anticipatory Bail) மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில், இன்று காலை அவரது இல்லத்தில் வைத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் முன்னெடுத்த விசாரணைகளின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *