Headlines

சுரேஷ் சல்லேயின் தடுப்புக் காவலை நீட்டிக்க வேண்டாம்; ஜனாதிபதி அநுர குமாவிடம் தாயார் உருக்கமான வேண்டுகோள்

அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சல்லேயின் தாயார், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில் தனது மகனின் தடுப்புக் காவலை மேலும் நீட்டிக்க வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (24) ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்தக் கடிதத்தில், தனது மகன் 37 வருடங்கள் இலங்கை இராணுவத்தில் சேவையாற்றியதாகவும், தனது இளமையையும் குடும்பத்துடன் செலவிடக்கூடிய பெறுமதிமிக்க ஆண்டுகளையும் நாட்டுக்காக அர்ப்பணித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், எந்தவொரு விசாரணையையும் நிறுத்துமாறு தாம் கோரவில்லை என்பதை அவர் வலியுறுத்தினார். தனது மகனுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் இருந்தால், அதிகாரிகள் அவற்றைப் புலனாய்வு செய்து, கிடைக்கக்கூடிய சான்றுகளைப் பரிசீலித்து உண்மையை நிலைநாட்டுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதேவேளை, விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே, ஒரு தாயாக தனது மகனின் தடுப்புக் காவல் மேலும் நீட்டிக்கப்படக் கூடாது என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

விசாரணைகள் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டுமே தவிர, தடுப்புக் காவல் ஆதாரங்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சுரேஷ் சல்லேயின் தாயார் ஜனாதிபதி திசாநாயக்கவைச் சந்திப்பதற்கான வாய்ப்பையும் கோரியுள்ளார். தாம் எந்தச் சிறப்புச் சலுகையையும் நாடவில்லை என்றும், நீதியையும் மனிதாபிமானத்தையும் நியாயமான வாய்ப்பையுமே எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தனது மகன் சுதந்திரமாகச் சட்டத்தை எதிர்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் ஜனாதிபதிக்கு விடுத்த வேண்டுகோளில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *