நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் பூஜ்ய கலபொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 6 வருட சிறைத்தண்டனையை, இன்று (05) முதல் மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டவிரோதமானது என கடந்த செப்டெம்பர் 10 ஆம் திகதி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த பின்னணியிலேயே இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான மாயாதுன்ன கொரயா மற்றும் லக்மாலி கருணாநாயக்க ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஞானசார தேரருக்கு, கடந்த காலங்களில் 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட பொதுமன்னிப்பின் கீழ் அவர் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
தற்போது அந்தப் பொதுமன்னிப்பை உயர் நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்கியுள்ள நிலையில், பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட ஞானசார தேரர் இன்று சிறைச்சாலை அதிகாரிகளால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே, அவருக்கு விதிக்கப்பட்ட எஞ்சிய சிறைத்தண்டனைக் காலத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
