Headlines

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்கும் சட்டமூலம்: 67 மனுக்கள் மீதான தீர்ப்பை சபாநாயகர் இன்று அறிவிக்கிறார்.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய இரகசியத் தீர்ப்பை சபாநாயகர் பெற்றுக்கொண்டுள்ள நிலையில், குறித்த தீர்ப்பு இன்று (22) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதற்காக நாடாளுமன்றம் இன்று முதல் 2026 செப்டெம்பர் 25 ஆம் திகதி வரை கூடவுள்ளது. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் நோக்கிலான இந்த 22ஆவது திருத்தச் சட்டமூலம், கடந்த ஓகஸ்ட் 18 ஆம் திகதி நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மைக்கு எதிராக பல்வேறு தரப்பினரால் 67 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. குறித்த மனுக்கள் பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன மற்றும் நீதியரசர்களான அச்ல வெங்கப்புலி, அர்ஜுன ஒபயசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரிக்கப்பட்டன.

விசாரணைகள் செப்டெம்பர் 2 ஆம் திகதி நிறைவடைந்த நிலையில், சட்டமூலம் குறித்த தமது தீர்ப்பை சபாநாயகருக்கு அறிவிப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இதேவேளை, 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் 2026 செப்டெம்பர் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நடைபெறும் என நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது. உத்தேச 22ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தி (SJB) எதிர்வரும் செப்டெம்பர் 24 ஆம் திகதி பொல்துவ சந்தியில் மாபெரும் போராட்டமொன்றையும் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *