நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் திறந்த பிடியாணையைப் (Open Warrant) பிறப்பித்துள்ளது.
அத்துடன், ஞானசார தேரர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. இந்தத் திறந்த பிடியாணையை பொலிஸ் மா அதிபர் ஊடாக நடைமுறைப்படுத்துமாறும் நீதிமன்ற உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஞானசார தேரரைக் கைது செய்து மன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (செப்டெம்பர் 30) பிடியாணை பிறப்பித்திருந்த நிலையிலேயே, மேன்முறையீட்டு நீதிமன்றமும் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் நேற்று குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஞானசார தேரர் மன்றில் ஆஜராகியிருக்கவில்லை. அவர் சுகவீனமுற்றுள்ளதாகத் தெரிவித்து மருத்துவ அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டதுடன், பிணைதாரர்களும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. இதன்போது, தனது தரப்பாளர் வழக்கை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாகவும், இது தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஞானசார தேரரின் சட்டத்தரணி அசோக வீரசூரிய மன்றில் தெரிவித்தார்.
எனினும், சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை தொடர்பில் தான் திருப்தியடையவில்லை எனத் தெரிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி, பிணைதாரர்கள் ஆஜராகத் தவறியமையையும் கருத்திற் கொண்டு ஞானசார தேரருக்குப் பிடியாணை பிறப்பித்திருந்தார். திருக்குர்ஆன் தொடர்பில் ஞானசார தேரர் வெளியிட்ட கருத்துக்கள் இஸ்லாம் மதத்தை அவமதிப்பதாகக் கூறி, தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் சட்டமா அதிபரால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
