உள்ளூர் சந்தையில் பொதியிடப்படாத (Unpackaged) தேங்காய் எண்ணெயை விற்பனை செய்வதைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) தெரிவித்துள்ளது.
பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் உப குழுவொன்றின் முன்னிலையில் ஆஜரான போது, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பதில் பணிப்பாளர் நாயகம் சமந்தா கருணசேன இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
சந்தையில் கிடைக்கும் தேங்காய் எண்ணெயில் கலப்படம் செய்யப்படுவதாகத் தொடர்ந்து எழுந்துள்ள கவலைகளுக்கு மத்தியிலேயே அதிகாரசபையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் முறையான வர்த்தமானி அறிவிப்பொன்று ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அது எதிர்காலத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முன்மொழியப்பட்டுள்ள புதிய விதிகளின் கீழ், பொதியிடப்பட்டு விற்கப்படும் தேங்காய் எண்ணெயில் உற்பத்தியின் பெயர், நிறை, காலாவதியாகும் திகதி, தொகுதி இலக்கம் (Batch Number) மற்றும் உற்பத்தியாளரின் விபரங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமான லேபிள் தகவல்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் சந்தையில் கிடைக்கும் தேங்காய் எண்ணெயின் தரத்தைப் பேணுவதையும் உறுதிப்படுத்துவதையும் இலக்காகக் கொண்டு, இலங்கை கட்டளைகள் நிறுவனத்துடன் (SLSI) இணைந்து நுகர்வோர் விவகார அதிகாரசபை தொடர்ச்சியாகப் பணியாற்றி வருவதாகவும் சமந்தா கருணசேன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
