அமெரிக்காவில் பன்றி ஒன்றின் சிறுநீரகம் மனித நோயாளி ஒருவருக்குப் பொருத்தப்பட்டு, இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக 271 நாட்கள் செயல்பட்டு சாதனை படைத்துள்ளது என்று அமெரிக்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
டைப் 2 நீரிழிவு நோயால் சிறுநீரகங்கள் செயலிழந்த 66 வயதான டிம் ஆண்ட்ரூஸ் என்ற நோயாளிக்கு இந்த மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த பன்றி சிறுநீரகம் ஒன்பது மாதங்கள் வரை சிறப்பாக செயல்பட்டது. இது தனக்கு நம்பிக்கையை அளித்ததாகவும், டயாலிசிஸ் செய்வதற்காக அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லாமல் சுதந்திரமாக வாழ உதவியதாகவும் டிம் ஆண்ட்ரூஸ் கூறினார்.
சிறுநீரக தானத்திற்கு உலகளவில் கடும் பற்றாக்குறை நிலவி வருகிறது. அமெரிக்காவில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் சிறுநீரக மாற்றத்திற்காக காத்திருக்கிறார்கள். இதற்கு தீர்வாக, வேறு இனங்களின் உறுப்புகளைப் பயன்படுத்தும் xenotransplantation முறை குறித்து ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த சிகிச்சைக்கு யுகடன் மினியேச்சர் பன்றி (Yucatan miniature pig) பயன்படுத்தப்பட்டது. மனித உடல் பன்றி உறுப்பை நிராகரிக்காமல் இருப்பதற்காக, அதன் மரபணுவில் 69 மாற்றங்கள் செய்யப்பட்டன.
Mass General Brigham மருத்துவமனை குழுவினர், மனித சிறுநீரகம் கிடைக்கும் வரை பன்றி சிறுநீரகங்களை ஒரு தற்காலிக “பாலமாக” பயன்படுத்த முடியும் என்று தெரிவித்தனர். பன்றி சிறுநீரகம் செயலிழந்த பிறகு, டிம் ஆண்ட்ரூஸுக்கு மனித நன்கொடையாளர் ஒருவரின் சிறுநீரகம் கிடைத்தது. தற்போது அந்த சிறுநீரகம் நன்றாக செயல்பட்டு வருகிறது.
பன்றி சிறுநீரகம் ஏன் செயலிழந்தது என்பது குறித்து முழுமையாகத் தெரியவில்லை என்றாலும், இது மருத்துவ உலகில் ஒரு புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
