சேலம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காகத் தண்ணீர் திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், அங்கிருந்து திரும்பும் வழியில் விவசாயியின் வீட்டிற்குச் சென்று குடும்பத்தினருடன் கலந்துரையாடிய சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு முதல்முறையாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக விஜய் தண்ணீர் திறந்து வைத்தார். இதற்காகச் சேலம் வந்த அவருக்கு மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களும், கட்சித் தொண்டர்களும் உற்சாக வரவேற்பளித்தனர். பாரம்பரிய உடையான பட்டு வேட்டி, சட்டையில் திறந்த வேனில் வந்த விஜய், சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்களைப் பார்த்து கையசைத்துச் சென்றார்.
தொடர்ந்து மேட்டூர் நோக்கிச் சென்றபோது, வழியில் திரண்டிருந்த விவசாயிகளையும் கட்சி நிர்வாகிகளையும் பார்த்து விஜய் கையசைத்து வரவேற்பை ஏற்றுக்கொண்டார். அப்போது விவசாயிகள் அவருக்குப் பச்சைத் துண்டு அணிவித்து மரியாதை செலுத்தினர். விவசாயிகளுடன் நின்று புகைப்படங்களை எடுத்துக் கொண்ட விஜய், எதிர்பாராதவிதமாக விவசாயிகளின் தோள் மீது கைபோட்டு நலம் விசாரித்ததோடு, அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். மேலும், விவசாயத்தின் மீதான தனது கவனத்தை வெளிப்படுத்தும் வகையில் விவசாயிகளிடம் நெல் மணியையும் பெற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்துவிட்டுத் திரும்பிய முதலமைச்சர் விஜய், மேட்டூர் அருகே உள்ள சின்னக்காவூர் பகுதிக்குச் சென்றார். அங்கு விவசாயி மாணிக்கம் என்பவரின் வீட்டிற்குத் திடீரெனச் சென்ற அவர், அங்கிருந்த கால்நடைகள் மற்றும் கால்நடைத் தொழுவத்தைப் பார்வையிட்டார்.
பின்னர் விவசாயி மாணிக்கம் மற்றும் அவரது குடும்பத்தினருடன் கலந்துரையாடிய விஜய், அவர்களின் வேளாண் பணிகள் குறித்தும், விவசாயம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்தார். முதலமைச்சர் நேரில் வந்து தங்களது குடும்பத்தினரிடமும், வாழ்க்கை முறை குறித்தும் விசாரித்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளதாக விவசாயி மாணிக்கம் தெரிவித்தார். மேட்டூர் அணை தண்ணீர் திறப்பு ஒருபுறம் முக்கியத்துவம் பெற்றாலும், விவசாயி வீட்டிற்குள் சென்று குடும்பத்தினருடன் விஜய் உரையாடிய இந்த திடீர் சந்திப்பு தற்போது பேசுபொருளாகியுள்ளது.
