இலங்கையின் பல பகுதிகளில் வரவிருக்கும் நாட்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வளிமண்டல நிலைமைகள் சாதகமாக மாறி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவை மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகள், வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு சுமார் 30 முதல் 40 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் சேங்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சூரியனின் தெற்கு நோக்கிய தோற்ற இயக்கம் காரணமாக, செப்டம்பர் 7 ஆம் திகதி வரை இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கமைய, அனமடுவ, மொரகொல்லகம, தம்புள்ளை, மணம்பிட்டிய மற்றும் வாழைச்சேனை ஆகிய பகுதிகளில் நண்பகல் 12.10 மணியளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
