பூட்டான் தலைநகர் திம்புவில் (Thimphu) நடைபெறவுள்ள அங்குரார்ப்பண ‘உலகளாவிய நனவான உணவு முறைகள் மாநாடு 2026’ இல் (Global Conscious Food Systems Summit 2026) முக்கிய உரையாளராகப் பங்கேற்கச் சென்றுள்ள இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, அந்நாட்டுப் பிரதமர் தஷோ ஷெரிங் டோப்கேயுடன் (Dasho Tshering Tobgay) இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகால, நெருக்கமான மற்றும் நட்புறவான இருதரப்புப் பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவது மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கல்வி, சுகாதாரம், வர்த்தகம், சுற்றுலா, விமானத் தொடர்பு மற்றும் இருநாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
