இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ள ஈரானிய கப்பல்களுக்கு விநியோகங்களை வழங்குவது தொடர்பில் அமெரிக்கா இலங்கைக்கு அழுத்தம் கொடுத்ததாக வெளியாகும் செய்திகளை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மறுத்துள்ளார்.
இலங்கையின் மூலோபாய அமைவிடம் காரணமாக, பெருமளவான சர்வதேச கப்பல்கள் நாட்டை அண்டிய கடல் வழிகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதாகவும், தேவைப்படும் போது அந்த கப்பல்களுக்குத் தேவையான ஒத்துழைப்பு மற்றும் தளவாட ஆதரவுகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) ஏற்பட்டுள்ள நிலைமையால், தற்போது இலங்கையின் 12 கடல் மைல் ஆட்புல எல்லைக்கு வெளியே சர்வதேச கடற்பரப்பில் சுமார் 47 கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 19 ஈரானிய கப்பல்களாகும். அவை நீண்டகாலமாக இப்பகுதியில் இயங்கி வருகின்றன.
இந்த கப்பல்கள் தொடர்பில் அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திற்கு எந்தவிதமான உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை எனவும், எவ்வித அழுத்தங்களையும் கொடுக்கவில்லை எனவும் வெளிநாட்டுத் தலையீடுகள் குறித்த செய்திகளுக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் குறிப்பிட்டார். வெளிநாட்டு அழுத்தங்களுக்கு இலங்கை அடிபணியாது எனவும், முடிவுகளை எடுப்பதில் தனது இறைமை, சுதந்திரம் மற்றும் தேசிய அடையாளத்தை தொடர்ந்து பாதுகாக்கும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
சர்வதேச கடல் சட்டங்களுக்கு அமைவாக மனிதாபிமான தேவைகளை பொறுப்புடன் கையாளும் அதேவேளை, அரசாங்கம் நடுநிலையான வெளியுறவுக் கொள்கையைப் பேணி வருவதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
சர்வதேச தடைகளுக்கு உள்ளான கப்பல்களுக்கு அரசாங்கம் எந்தவொரு பொருட்கள் அல்லது விநியோகங்களையும் வழங்கவில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார். தனியார் நிறுவனங்கள் சுயாதீனமாக இவ்வாறான கப்பல்களுக்கு பொருட்கள் அல்லது சேவைகளை வழங்கினால், அதற்கான சட்டத் தேவைகளைப் புரிந்துகொள்வதற்கும் பொறுப்புடன் செயற்படுவதற்கும் அவர்களே பொறுப்பாளிகள் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
