கொழும்பை மையப்படுத்திய புதிய மின்சார ரயில் சேவைத் திட்டம் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவான் சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கிய இத்திட்டத்திற்கான ஆரம்பத் திட்டமிடல் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மருதானையில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ள இந்த மின்சார ரயில் சேவை, பயணிகளுக்கு மிகவும் வினைத்திறனான மற்றும் நவீன பொதுப் போக்குவரத்து முறையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், பெலியத்தையில் இருந்து ருகுணு குமாரி ரயிலில் பயணிக்கும் பயணிகள் பாணந்துறையில் இறங்கி, அங்கிருந்து கொழும்பு நோக்கி புதிய மின்சார ரயில் வலையமைப்பு ஊடாகத் தமது பயணத்தைத் தொடர முடியும் என அவர் விளக்கினார். மேலும், நாட்டின் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறையில் தற்போதைய மற்றும் திட்டமிடப்பட்ட அபிவிருத்திகள் குறித்தும் பிரதி அமைச்சர் எடுத்துரைத்தார். அரச போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்துவதன் ஒரு பகுதியாக கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மெட்ரோ பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
