சிறுவர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தியை உறுதி செய்வது தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பு எனவும், ஒவ்வொரு சிறுவருக்கும் தமது அபிலாஷைகளை அடைந்துகொள்வதற்குச் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள விசேட வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர்களின் கற்பனைத் திறன், அபிலாஷைகள் மற்றும் படைப்பாற்றல் என்பன இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சிறுவர்களின் குரல்களுக்குச் செவிசாய்க்கும் மற்றும் அவர்களது ஆற்றல்களுக்கு ஆதரவளிக்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
சிறுவர்களை வன்முறைகள் மற்றும் பாகுபாடுகளில் இருந்து பாதுகாப்பதோடு, கல்வி, சமூகப் பாதுகாப்பு, சுகாதாரம், போசணை, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வசதிகளுக்கான அணுகலை விரிவுபடுத்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். இனம், மதம், பொருளாதார நிலை அல்லது புவியியல் அமைவிடம் என்பன சிறுவர்கள் கல்வியைப் பெறுவதற்கோ அல்லது அவர்களது திறன்களை வளர்த்துக்கொள்வதற்கோ ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய கல்வி முறையில் முன்னெடுக்கப்படும் சீர்திருத்தங்கள் குறித்துக் குறிப்பிட்ட அவர், மாறிவரும் உலகளாவிய நிலைமைகளுக்கு ஏற்ப திறன் அடிப்படையிலான கல்வி முறைமையொன்றை நோக்கியதாக இந்த மாற்றம் அமையும் என்றார். பெற்றோர்களின் சுமைகளைக் குறைப்பதோடு, சிறுவர்களுக்கு தேவையற்ற மன அழுத்தங்களை ஏற்படுத்தாத கற்றல் சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.
சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் உள்ள மற்றும் பராமரிப்பு தேவைப்படும் சிறுவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் கல்வி உதவித்தொகைகள் மற்றும் ஏனைய வேலைத்திட்டங்கள் விரிவுபடுத்தப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார். அத்துடன், சிறுவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை வழங்குவதற்கு ஏற்ற நிலையான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இளைய தலைமுறையினருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதற்காக சமூகங்களை ஒன்றிணைக்கும் நோக்கிலான ‘ஒன்றிணைந்த தேசம்’ (A Nation United) என்ற தேசிய வேலைத்திட்டம் குறித்தும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
‘பலமான மனது – வளமான சிறுவர்கள்’ என்ற தொனிப்பொருளின் கீழ் இம்முறை உலக சிறுவர் தினக் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்துள்ள மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுக்கும், சிறுவர் உரிமைகள், பாதுகாப்பு, கல்வி மற்றும் நல்வாழ்வு தொடர்பான தேசிய சிறுவர் தின வாரத்தை பிரகடனப்படுத்தியமைக்கும் ஜனாதிபதி தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
இறுதியாக, இலங்கையிலுள்ள அனைத்து சிறுவர்களுக்கும் உலக சிறுவர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது செய்தியை நிறைவு செய்துள்ளார்.
