Headlines

டில்வின் சில்வா தலைமையிலான JVP குழுவினர் டெல்லி BJP அலுவலகத்திற்கு விஜயம்!

இலங்கையின் ஆளும் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான குழுவினர், புதன்கிழமையன்று புதுடெல்லியிலுள்ள பாரதிய ஜனதா கட்சியின் (BJP) அலுவலகத்திற்கு விஜயம் செய்துள்ளனர். அங்கு அவர்களுக்கு டெல்லி BJP தலைவர் ஹர்ஷ் மல்ஹோத்ரா சிறப்பான வரவேற்பளித்துள்ளார்.

இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்று, செப்டெம்பர் 27 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 1 ஆம் திகதி வரை இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக BJP வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டில்வின் சில்வா தலைமையிலான இந்த ஐவர் அடங்கிய குழுவில் சந்திரிகா அதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் அதம்பாவா, கபிலன் சுந்தரமூர்த்தி மற்றும் கல்பனா மதுபாஷினி ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

முன்னதாக, கடந்த திங்கட்கிழமை டெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் BJP-யின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் மற்றும் ஏனைய மூத்த தலைவர்களையும் இக்குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடினர். அத்துடன், வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், BJP தேசிய தலைவர் நிதின் நபின் மற்றும் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா ஆகியோரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இரு கட்சிகளுக்கும் இடையிலான ஈடுபாட்டை வலுப்படுத்துவதுடன், அமைப்பு ரீதியான அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கடந்த செப்டெம்பர் 8 முதல் 10 ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்திருந்த இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்திருந்தார். கடினமான காலங்களில் இலங்கையுடன் இந்தியா எப்போதும் தோளோடு தோள் நிற்கும் எனவும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பல நூற்றாண்டுகள் பழமையானது எனவும் அவர் அப்போது வலியுறுத்தியிருந்தார். அத்துடன், கடந்த ஆண்டு ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளியின் போது இலங்கைக்கு ஆதரவளிக்க ‘ஒபரேஷன் சாகர் பந்து’ ஊடாக இந்தியா உடனடியாகச் செயற்பட்டதையும் ராஜ்நாத் சிங் நினைவுகூர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *