Headlines

டெல்லி போராட்டத்தில் பெண் ஊடகவியலாளர்கள் மீது பொலிஸாரின் பாலியல் அத்துமீறல்: குற்றப்புலனாய்வு பிரிவுக்கு மாறியது விசாரணை!

இந்தியத் தலைநகர் டெல்லியில் நடைபெறும் போராட்டங்களின் போது, பொலிஸார் தங்களுக்கு எதிராக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மூன்று பெண் ஊடகவியலாளர்கள் பரபரப்புக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெருமளவிலான இளைஞர்களை பொலிஸார் தடுத்து வைத்ததை அடுத்தே, சனிக்கிழமை இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த புகாரை டெல்லி பொலிஸாரின் புதுடெல்லி மாவட்டம் பெற்றுள்ளதாகவும், அது நியாயமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைக்காக குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு (Crime Branch) மாற்றப்பட்டுள்ளதாகவும் டெல்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாக்காளர் பட்டியல்களில் செய்யப்பட்ட பாரிய திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து மூன்றாவது நாளாக டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டனர். இரட்டைப் பதிவுகள் மற்றும் தகுதியற்ற பெயர்களை நீக்குவதற்கே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. இதுவரை, வாக்காளர் பட்டியலிலிருந்து 130 மில்லியன் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

மத்திய டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தில் இருந்து மக்கள் பொலிஸாரால் இழுத்துச் செல்லப்படும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதன்போது, சில பொலிஸார் தங்களை தகாத முறையில் தொட்டதாக பெண் ஊடகவியலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பெண்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சம் கொண்டுள்ளதாகவும், இதற்கு உள்துறை அமைச்சகம் பதிலளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

“பொலிஸார் என்னை தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்றனர். அவர்கள் கொடூரமாக நடந்து கொள்கிறார்கள்” என ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவியும், சமூக ஆர்வலருமான ஆஹ்னா சிங் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். பொலிஸாருக்கு எதிரான புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ள இந்திய பிரஸ் கிளப் (Press Club of India), ஊடகவியலாளர்கள் நடத்தப்பட்ட விதம் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. ஜனநாயக நாட்டில் இவ்வாறான நடத்தைகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த வாக்காளர் பட்டியல் திருத்தமானது பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சிக்கு (BJP) சாதகமாக அமையும் என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். ஆனால், தேர்தல் ஆணையமும், பாஜகவும் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளன. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கு முன்னர் கடைசியாக இந்த திருத்தம் செய்யப்பட்டதாகவும், இறந்தவர்கள், நாட்டை விட்டு வெளியேறியவர்கள் மற்றும் பல இடங்களில் பதிவு செய்துள்ளவர்களை கணக்கில் கொள்ள வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் கூறுகிறது.

இந்த போராட்டங்களில், இணையத்தளத்தில் நையாண்டி இயக்கமாகத் தொடங்கிய செல்வாக்கு மிக்க கோக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) ஆதரவாளர்களும் அடங்குவர். கல்விச் சீர்திருத்தங்களைக் கோரி நடந்த தொடர் போராட்டங்களை அடுத்து, அப்போதைய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கடந்த ஜூலை மாதம் பதவி விலகச் செய்ததே இக்கட்சியின் முதல் பெரும் வெற்றியாகும்.

விசேட தீவிர திருத்தம் (SIR) எனப்படும் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து, ஞானேஷ் குமாரின் சக தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர், தங்களுக்குத் தெரியாமல் முடிவுகள் எடுக்கப்பட்டதாக 10 மாதங்களில் 14 முறையாவது அதிகாரபூர்வமாக ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக வெளியான செய்தியை அடுத்தே CJP இந்தப் புதிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.

எவ்வாறாயினும், ‘மாறுபட்ட கருத்துக்கள்’ முடிவெடுக்கும் செயல்முறையின் ஒரு பகுதி என்றும், அனைத்து முடிவுகளும் ஒருமனதாகவே எடுக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. ஆயினும், இந்தத் தகவல்கள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவைக் கோரியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *