Headlines

ட்ரம்ப்புடனான வர்த்தக மோதலுக்கு மத்தியில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய கூட்டணியை அமைக்கும் கனடா!

ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் “இணை உறுப்பினராக” (associate member) கனடா இணைவதற்கான கதவுகளை ஐரோப்பிய ஒன்றியம் திறந்துவிட்டுள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயென் (Ursula von der Leyen) புதன்கிழமை (செப். 16) தெரிவித்தார். இந்த அந்தஸ்து ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்பந்தங்களில் இதுவரை குறிப்பிடப்படாத ஒன்றாகும்.

வொன் டெர் லெயெனின் இந்த அறிவிப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும். வரலாற்று ரீதியாக ஐரோப்பிய ஒன்றியம் இவ்வாறான நெகிழ்வான வகைகளை (flexible categories) எதிர்த்து வந்துள்ளதுடன், உக்ரைனை முழுமையான உறுப்பினராக்குவதற்கான ஒரு படியாக அந்த நாட்டிற்கு இணை உறுப்பினர் அந்தஸ்தை வழங்குவது குறித்து மே மாதம் ஜேர்மனி முன்வைத்த பரிந்துரைக்கும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் சுமாரான வரவேற்பையே அளித்திருந்தன.

ஸ்ட்ராஸ்பேர்க்கில் (Strasbourg) உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் வருடாந்த உரையின் போது, “கூட்டாண்மைகள் என்பது ஐரோப்பாவிற்கான ஒரு மூலோபாயத் தேர்வாகும். ஆனால் அவை சர்வதேச விதிகள் அடிப்படையிலான அமைப்பில் ஏற்பட்டுள்ள விரிசல்களுக்கும் பதிலளிக்கின்றன,” என வொன் டெர் லெயென் குறிப்பிட்டார்.

“செயற்கை நுண்ணறிவு (AI) முதல் காலநிலை மாற்றம் வரை, ஆர்க்டிக் முதல் புவிசார் அரசியல் வரை உலகை நாம் ஒரே கண்களாலேயே பார்க்கிறோம். அத்துடன் உக்ரைன் விவகாரம், பாதுகாப்பு, மூலப்பொருட்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகள் ஆகியவற்றிலும் நாம் ஒன்றாகவே நிற்கிறோம். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக… ஐரோப்பாவும் கனடாவும் ஜனநாயகத்தை முழுமையாக நம்புகின்றன” என அவர் மேலும் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு “தனித்துவமான கூட்டணியை” கனடா நாடுவதாகவும், ஆனால் முழுமையான உறுப்புரிமையை அல்ல எனவும் கனேடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) இந்த வார தொடக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, வொன் டெர் லெயென் ஸ்ட்ராஸ்பேர்க்கிற்கு வருமாறு கார்னிக்கு அழைப்பு விடுத்திருந்ததுடன், அவர் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தனது சொந்த உரையை நிகழ்த்தவுள்ளார்.

கடந்த மாதம் அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கனடா-அமெரிக்க உறவுகளில் வரலாற்றுச் சரிவு ஏற்பட்டு, தொடர்ச்சியான பழிக்குப் பழி சுங்கவரி நடவடிக்கைகள் (tit-for-tat tariff measures) உருவான நிலையிலேயே பிரதமர் கார்னியின் இந்த ஐரோப்பியப் பயணம் அமைந்துள்ளது.

“எங்கள் கூட்டாண்மைகளை நாம் அவசரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நான் கூறினேன். எனவே, ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராகக் கனடா இணைவதற்கான கதவுகளைத் திறப்பதில் உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் விரும்புகிறேன்,” என்று வொன் டெர் லெயென் கூறினார்.

உற்பத்தி முதல் செயற்கை நுண்ணறிவு, முக்கியமான கனிமங்கள் மற்றும் எரிசக்தி வரையிலான பல்வேறு துறைகளில் ஐரோப்பிய ஒன்றியமும் கனடாவும் இணைந்து பணியாற்றும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

“நாம் நுண்ணறிவு உற்பத்தித் துறையில் (intelligent manufacturing) பணியாற்றுவோம். ஒரு தொழில்நுட்பக் கூட்டணியை உருவாக்குவோம். பாதுகாப்புக் கைத்தொழில் தளங்களை ஒருங்கிணைப்போம். ஆர்க்டிக் பகுதியை ஒரு முதன்மையான கூட்டுத் திட்டமாக மாற்றுவோம்” என அவர் உறுதியளித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் எதிர்ப்பைத் தவிர்க்கும் ஒரு சாத்தியமான முயற்சியாக, “இந்தக் கூட்டாண்மை வேறு யாருக்கும் எதிரானது அல்ல” எனவும் வொன் டெர் லெயென் தனது உரையில் மேலும் சுட்டிக்காட்டினார். (CNA)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *