தமிழ் முரசு விமர்சனம்
ரேட்டிங்: 3.5/5 நட்சத்திரங்கள்
நடிகர்கள்: சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனன், சுனில் உள்ளிட்ட பலர்.
இயக்குநர்: வெங்கி அட்லூரி
சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஆக்ஷன் கதைகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, ஒரு குடும்பத்தின் மதிப்பையும் உறவுகளின் மேன்மையையும் பறைசாற்றும் கதையில், சூர்யா முற்றிலும் வித்தியாசமான ஃபீல் குட் தோற்றத்தில் களமிறங்கியுள்ளார். இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ இன்று வெளியானது. சூர்யா, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன், ஜி.வி. பிரகாஷின் இசையும் இணைந்து, இது ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமாக மாறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் கதை
படத்தின் தொடக்கக் காட்சியே மாஸாக உள்ளது. விஸ்வநாத் (சூர்யா) துப்பாக்கிச் சூட்டில் இந்தியாவுக்குத் தங்கப் பதக்கம் பெற்றுத்தரும் வெற்றியுடன் அவரது என்ட்ரி அட்டகாசமாக உள்ளது. அவரது தந்தையாக ராஜீவ் மேனன் நடித்திருக்கிறார். சிறு வயதில் அப்பா சொல்லிக் கொடுத்த பாடத்தை, ஒலிம்பிக்கில் ஒரு இக்கட்டான நேரத்தில் எப்படி சூர்யா சாதிக்கிறார் என்பது போன்ற ஒரு அற்புதமான ஓபனிங் காட்சி மிகவும் கச்சிதமாக அமைந்துள்ளது.
குடும்ப உறவுகளின் மேன்மை: விஸ்வநாத் (சூர்யா) 40 வயதைக் கடந்தும் திருமணம் செய்யாமல் இருக்கிறார். உடல்நலம் குன்றிய அவரது தாயாக ராதிகா சரத்குமார், தனது மகனை எப்படியாவது திருமணத்துக்குச் சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதற்காக, அவருக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று கேட்கிறார். இதைத் தொடர்ந்து, வாரிசுக்காக சூர்யா வாடகைத் தாய் மூலமாக ஒரு குழந்தையை வீட்டிற்கு அழைத்து வருகிறார்.
இரண்டாம் பாதி: அதன் பின்னர், குழந்தையின் போன் மேரோ அறுவை சிகிச்சைக்காக மேடி (மமிதா பைஜு), வெளிநாட்டில் மருத்துவம் படித்துக் கொண்டிருப்பவர் வருகிறார். அவருக்கும் குழந்தைக்குமான தொடர்பு, விஸ்வநாத்திற்கும் மேடிக்குமான 20 வருட வயது வித்தியாசம் போன்றவை சூர்யாவின் திருமணத்துக்குத் தடையாகின்றன. சூர்யா இந்தத் திருமணத்துக்குச் சம்மதிக்க வைத்தாரா? இல்லையா? என்பது தான் இந்த ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் மீதிக் கதை.
படம் எப்படி இருக்கு?
சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் ஆகியோரின் பாசிட்டிவ் வைப் மற்றும் க்யூட்டான காமெடி காட்சிகள் படத்திற்கு ஒரு ஃபிரெஷ்ஷான உணர்வைக் கொடுக்கின்றன. முதல் பாதி முழுக்கவே படம் எங்கேயும் டீவியேட் ஆகாமல், ரிச்சான புரொடக்ஷன் வேல்யூவுடன் ஒவ்வொரு காட்சியும் வொர்த்தாகவே உள்ளது. மேடி கதாபாத்திரத்தில் மமிதா பைஜு, நீச்சல் குளத்தில் இருந்து குதித்து எழும் முதல் காட்சியில் இருந்து கிளைமேக்ஸ் வரை மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். சூர்யா திருமணத்துக்கு நோ சொல்ல, குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு காசுக்காக வந்த மமிதா பைஜுவை விமான நிலையத்தில் கொண்டு விடும் காட்சிகள் எல்லாம் அட்டகாசம்.
சவாலான இரண்டாம் பாதி: இரண்டாம் பாதியில் ரவீனா டாண்டன் போர்ஷன் வருவதும், அவரது மகளாக பவானி ஸ்ரீயின் திருமணத்திற்காக சூர்யா செய்யும் காட்சிகள் ரசிக்கும் படி இருந்தாலும், முதல் பாதி அளவுக்கு சுவாரஸ்யமாக இல்லையே என்கிற உணர்வை 2வது பாதி கடத்துகிறது. அந்தப் போர்ஷனில் சூர்யாவுக்குப் பதிலாக மமிதா பைஜுவை வைத்துச் சற்று சரி செய்திருந்தால் படம் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.
நிறைகள்:
- குடும்ப சென்டிமெண்ட்: இயக்குநர் வெங்கி அட்லூரி, சூர்யாவுக்கு ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இல்லாமல் ஃபேமிலி சென்டிமெண்ட் நிறைந்த கதையை கொடுத்தாலும், ரசிகர்களை மனதில் வைத்துக் கொண்டு உருவாக்கிய மாஸ் காட்சிகளும், கடைசி வரை கண்ணியம் தவறாமல் பார்த்துக் கொண்ட விதமும் சிறப்பு.
- பிரமிப்பான புரொடக்ஷன்: சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் செலவு செய்திருப்பது ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிகிறது. பிரைவேட் ஜெட் முதல் சூர்யாவின் வீடு, ஊட்டியில் இருக்கும் பூர்வீக வீடு என அனைத்தும் ராயலாக உள்ளது.
- இசை மற்றும் ஒளிப்பதிவு: ஜி.வி. பிரகாஷின் பட்டாம்பூச்சி பாடல் ஆட்டம் போட வைக்கிறது. சில இடங்களில் இசையை கட் செய்துவிட்டு சூர்யாவின் பர்ஃபார்மன்ஸை மட்டுமே ரசிக்க ரசிகர்களுக்கு இடம் கொடுத்த விதம் அருமை. நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு ராயலாகவும், நவீன் நூலியின் எடிட்டிங் கச்சிதமாகவும் படத்தை மெருகேற்றியுள்ளன.
குறைகள்:
- இரண்டாம் பாதி: முதல் பாதியில் இருந்த அளவுக்கு ஹை மொமண்ட்ஸ் 2வது பாதியில் பெரிதளவு குறைந்து விட்டது. ரவீனா டாண்டன் போர்ஷன் பெரிதாக கனெக்ட் ஆகவில்லை.
- தேவையில்லாத சண்டை: முதல் பாதியில் ஒரு ஃபைட் வைத்ததைப் போலவே 2வது பாதியிலும் ஒரு சண்டைக் காட்சி திணிப்பாகவே இருந்தது.
முடிவு:
சில குறைகள் இருந்தாலும், படம் எங்கேயும் பெரிதாகப் போரடிக்காமல், ஒரு பக்காவான குடும்ப உறவுகளின் மதிப்பைப் பறைசாற்றும் படமாக ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ பிராமிஸ் பண்ணதை வெங்கி அட்லூரி ரசிகர்களுக்கு டெலிவரி செய்துள்ளார். கண்டிப்பாக சூர்யாவுக்கு இது அடுத்த பிளாக்பஸ்டர் தான். குடும்பத்துடன் தியேட்டருக்குச் சென்று பார்க்கலாமா? மமிதா பைஜு நடிப்பு எப்படி? என்று கேட்டால், கண்டிப்பாகப் பார்க்கலாம், மமிதா பைஜு நடிப்பு அட்டகாசம்!
