நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81வது அமர்வில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், பல்தரப்பு ஒத்துழைப்பு, காலநிலை நீதி மற்றும் சர்வதேச நிறுவனங்களின் சீர்திருத்தம் ஆகியவற்றை வலியுறுத்தினார்.
வளர்ந்து வரும் முரண்பாடுகள், மனிதாபிமான நெருக்கடிகள், காலநிலை அனர்த்தங்கள், பெருகிவரும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் விரைவான தொழில்நுட்ப வளர்ச்சிகள் என்பன சர்வதேச நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை பலவீனப்படுத்தியுள்ளன என அமைச்சர் சுட்டிக்காட்டினார். உலகளாவிய சவால்களை எந்தவொரு நாடும் தனித்து எதிர்கொள்ள முடியாது எனவும், கூட்டுத் தீர்வுகளே இதற்கு அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
காலநிலை நீதி
இலங்கையில் நூற்றுக்கணக்கானோரின் உயிரிழப்புக்கும், இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவதற்கும் காரணமான ‘டிட்வா’ சூறாவளியைக் சுட்டிக்காட்டிய அமைச்சர், உலகளாவிய உமிழ்வுகளுக்கு மிகக்குறைந்த பங்களிப்பை வழங்கும் நாடுகள் பெரும் சுமையை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டார். நேபாளம் மற்றும் சீனாவில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளுக்கும் அவர் அனுதாபம் தெரிவித்தார். “காலநிலை நீதி அவசர யதார்த்தமாக மாற வேண்டும்” எனத் தெரிவித்த அவர், 2030 ஆம் ஆண்டளவில் 70 சதவீத மீளுருவாக்க சக்தி பயன்பாட்டையும், 2050 ஆம் ஆண்டளவில் காபன் நடுநிலைமையையும் எட்டுவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டையும் மீள வலியுறுத்தினார்.
சர்வதேச நிறுவனங்களின் சீர்திருத்தம்
சர்வதேச நிதி முறைமையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், கடன் மற்றும் அபிவிருத்தி நிதியளிப்பில் அதிக நியாயம் தேவை எனவும் ஹேரத் கோரிக்கை விடுத்தார். நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் வளரும் நாடுகள் பாரிய நிதி நெருக்கடிகளை எதிர்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், ஐக்கிய நாடுகளை பலப்படுத்துவதற்கான UN80 முன்முயற்சியையும் அவர் ஆதரித்தார்.
பல்தரப்பு ஒத்துழைப்புக்கான உறுதிப்பாடு
ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச சட்டம் மற்றும் பல்தரப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றிற்கு இலங்கை தொடர்ந்து ஆதரவளிக்கும் எனத் தெரிவித்த அமைச்சர், ஐ.நா அமைதி காக்கும் படைகளுக்கான இலங்கையின் பங்களிப்பு, அணு ஆயுதக் குறைப்பிற்கான ஆதரவு மற்றும் உலகப் பெருங்கடல்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் குறித்தும் விளக்கினார்.
மேற்காசிய முரண்பாடுகள், குறிப்பாக காஸா நிலைமை குறித்தும் அவர் பேசினார். சர்வதேச மனிதாபிமான சட்டம் மதிக்கப்பட வேண்டும் எனவும், பொதுமக்களுக்கான மனிதாபிமான உதவிகள் தடையின்றி வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். 1967 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட எல்லைகளுக்குள் இஸ்ரேலுடன் சுயாதீனமான மற்றும் இறையாண்மையுள்ள பலஸ்தீன தேசம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற பலஸ்தீன மக்களின் உரிமையையும் இலங்கை மீள வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.
உலகளாவிய ரீதியில் ஏற்படும் மாற்றங்கள் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் எனவும், வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையிலான இடைவெளிகளைக் குறைப்பதாக அமைய வேண்டும் எனவும் குறிப்பிட்டு அமைச்சர் விஜித ஹேரத் தனது உரையை நிறைவு செய்தார்.
