Headlines

பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக ஜி ஜின்பிங் இந்தியா வர வாய்ப்பு; 7ஆண்டு கால விரிசலுக்கு முற்றுப்புள்ளி?

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அடுத்த மாதம் புது தில்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அவர் ஒரு பெரிய தூதுக்குழுவுடன் வரவுள்ளார் என்று மூன்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது ஏழு ஆண்டுகளில் அவரது முதல் வருகையாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள பனிப்போர் விலகுவதற்கான புதிய அறிகுறியாகவும் அமையும்.

இந்தியா செப்டம்பர் 12 முதல் 13 வரை உச்சிமாநாட்டை நடத்துகிறது. இதில், 2020ஆம் ஆண்டு ஏற்பட்ட எல்லை மோதல்களுக்குப் பிறகு, பெய்ஜிங் மற்றும் புது தில்லி உறவை ஸ்திரப்படுத்துவதற்கான முயற்சிகளைக் குறிப்பதாகவே ஜி ஜின்பிங்கின் வருகை பார்க்கப்படுகிறது. பிரிக்ஸ் நிகழ்ச்சி நிரலை விட, இருதரப்பு உறவின் மீதான அதன் தாக்கம் உன்னிப்பாகக் கவனிக்கப்படும்.

“சீன அதிகாரிகள் ஹோட்டல்கள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை இறுதி செய்வதில் மும்முரமாக உள்ளனர்,” என்று இதுகுறித்து நேரடியாகத் தெரிந்த இந்திய வட்டாரங்களில் ஒருவர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவுக்குச் சென்றிருந்தார், ஆனால் உறவு படிப்படியாகவே மேம்பட்டுள்ளது. மிக சமீபத்தில், எல்லை தொடர்பான புதிய தகராறு இரு தரப்புக்கும் இடையே கடுமையான இராஜதந்திர மோதல்களைத் தூண்டியது.

மற்ற இரண்டு இந்திய வட்டாரங்கள், 2019இல் 200க்கும் குறைவான அதிகாரிகள் வந்திருந்த நிலையில், இம்முறை ஜி ஜின்பிங்குடன் சுமார் 400 அதிகாரிகள் கொண்ட தூதுக்குழு வர வாய்ப்புள்ளது என்று தெரிவித்தன.

எல்லை மற்றும் பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான நீண்டகால வேறுபாடுகளை நிர்வகிக்கும் அதே வேளையில், ஈடுபாட்டை விரிவுபடுத்துவதற்கான வழிகளை ஆராய இரு நாட்டு அதிகாரிகளும் உச்சிமாநாட்டைப் பயன்படுத்துவார்கள் என்று அந்த வட்டாரங்கள் மேலும் சேர்த்தன.

ஜி ஜின்பிங்கின் இறுதி பயணத் திட்டங்கள் மற்றும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான சாத்தியமான இருதரப்பு சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

சீன வெளியுறவு அமைச்சகம் இது குறித்துக் கூறும்போது, “பிரிக்ஸ் ஒத்துழைப்புக்கு சீனா மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் தீவிரமாகப் பங்கேற்கிறது. நடப்பு தலைவரான இந்தியா, இந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதை ஆதரிக்கிறது.”

“ஜி ஜின்பிங்கின் வருகை குறித்து” எங்களிடம் தற்போது எந்தத் தகவலும் இல்லை” என்று அது கூறியது. ஜி ஜின்பிங் 2025இல் பிரேசிலில் நடைபெற்ற கடைசி பிரிக்ஸ் உச்சிமாநாட்டைத் தவறவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *