Headlines

மேல் மாகாண புலனாய்வுப் பிரிவின் இரகசியத் தகவல்: மல்வத்தை சந்தியில் நேற்றிரவு இடம்பெற்ற பரபரப்புச் சம்பவம்!

கம்பஹா – அஸ்கிரிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் பொலிஸாரின் சமிக்ஞையை மீறிச் சென்ற வேன் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கம்பஹா பிரதேசத்தில் வேன் ஒன்றின் ஊடாக போதைப்பொருள் விநியோகிக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வெலிவேரிய பொலிஸ் நிலைய அதிகாரிகளைக் கொண்ட விசேட குழுவொன்று நேற்றிரவு (12) இந்தத் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

சந்தேகத்திற்குரிய வேன் உடுகம்பளை பகுதியை நோக்கிப் பயணிப்பதை உறுதி செய்த பொலிஸார், பொலிஸ் ஜீப் ஒன்றில் அந்த வேனைப் பின்தொடர்ந்துள்ளனர். பொலிஸார் தன்னைத் தொடர்வதை அறியாத சாரதி, உடுகம்பளை வீதியில் உள்ள மல்வத்தை சந்திக்கு அருகில் வேனை நிறுத்தியுள்ளார். இதன்போது, பொலிஸ் அதிகாரிகள் ஜீப்பில் இருந்து இறங்கி வேனைச் சோதனையிட முற்பட்டுள்ளனர்.

எனினும், நிலைமையைப் புரிந்து கொண்ட சாரதி வேனை அதிவேகமாக முன்னும் பின்னுமாகச் செலுத்தியுள்ளதுடன், வீதியில் பயணித்த பல வாகனங்கள் மீதும் மோதியுள்ளார். அத்துடன், பொலிஸ் ஜீப் மீதும் வேனை மோதிய அவர், அதிகாரிகளைக் காயப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோட முயற்சித்துள்ளார். இதனையடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகப் பொலிஸார் வேன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் வேனின் சாரதி காயமடைந்துள்ளதுடன், அவர் பொலிஸ் பாதுகாப்புடன் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் குறித்த வேனைச் சோதனையிட்ட போது, அதிலிருந்து 15 கிராம் ஹெரோயின் மற்றும் 9 கிராம் ‘ஐஸ்’ (Ice) போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தற்போது தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *