Headlines

வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி: தொலைபேசி எண் இல்லாமல் இனி பாதுகாப்பாக உரையாடலாம்!

பிரபல செய்திப் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), பயனர்களின் தனியுரிமையை (Privacy) மேலும் பாதுகாக்கும் நோக்கில் புதிய ‘Username’ (பயனர் பெயர்) வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த புதிய வசதி இந்த ஆண்டின் பிற்பகுதியில் முழுமையாக பயன்பாட்டிற்கு வரவுள்ள நிலையில், அதற்கான முன்கூட்டிய முன்பதிவு (Username reservation) தற்போது உலகளவில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த வசதி முழுமையாக பயன்பாட்டுக்கு வரும்போது, பயனர்கள் தங்களின் தொலைபேசி எண்ணை (Phone number) மற்றவர்களுக்குப் பகிராமலேயே வாட்ஸ்அப்பில் புதிய நபர்களுடனோ அல்லது வணிக நிறுவனங்களுடனோ தொடர்புகொள்ள முடியும். புதிய நபர்களிடம் தொலைபேசி எண்களைப் பகிர்வதற்குத் தயங்குபவர்களுக்கும், பொதுவான குழுக்களில் (Groups) இணையும்போதும் எண்கள் கசிவதைத் தடுக்கவும் இது பெரிதும் உதவும்.

வாட்ஸ்அப்பில் உலகளவில் 300 கோடிக்கும் அதிகமான பயனர்கள் உள்ளதால், ஒரே பெயரைப் பலரும் பயன்படுத்த நினைக்கும் போது சிக்கல் எழ வாய்ப்புள்ளது. இதைக் கருத்தில் கொண்டே, பயனர்கள் தங்களுக்கு விருப்பமான பெயரை முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளும் வாய்ப்பை வாட்ஸ்அப் இப்போது வழங்கியுள்ளது.

Username-ஐ எவ்வாறு பதிவு செய்வது?

  • முதலில் வாட்ஸ்அப் செயலியை புதிய வெர்ஷனுக்கு (Latest Version) ‘Update’ செய்து, Settings > Account > Username என்ற பகுதிக்குச் செல்ல வேண்டும்.
  • அங்கு தங்களுக்கு விருப்பமான பெயரை உள்ளீடு செய்து பதிவு செய்துகொள்ளலாம்.
  • குறிப்பிட்ட பெயர் ஏற்கனவே வேறொருவரால் பதிவு செய்யப்பட்டிருந்தால், வாட்ஸ்அப்பிலேயே உள்ள ‘Username generator’ மூலம் வேறு சில பெயர்களைப் பரிந்துரையாகப் பெறலாம்.
  • தொழில் நிறுவனங்கள் மற்றும் கிரியேட்டர்கள், தங்களின் இன்ஸ்டாகிராம் (Instagram) அல்லது பேஸ்புக் (Facebook) பெயர்களையே வாட்ஸ்அப்பிலும் பெற்றுக்கொள்ளும் பிரத்தியேக வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கூடுதல் பாதுகாப்பு வசதிகள்:

வாட்ஸ்அப்பில் பொதுவான பெயர் தேடல் பட்டியல் (Public directory) எதுவும் இருக்காது என நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது, ஒருவரின் சரியான Username தெரிந்தால் மட்டுமே அவரை முதன்முறையாகத் தொடர்புகொள்ள முடியும். மேலும் கூடுதல் பாதுகாப்பிற்காக ‘Username key’ என்ற விருப்பத் தேர்வும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனைச் செயற்படுத்தினால், புதிய நபர்கள் உங்களை Username மூலம் தொடர்புகொள்ள முற்படும்போது நீங்கள் உருவாக்கியுள்ள அந்த இரகசிய ‘Key’-ஐயும் கட்டாயம் உள்ளீடு செய்ய வேண்டும்.

இந்த வசதி அடுத்த சில மாதங்களில் படிப்படியாக அனைத்துப் பயனர்களுக்கும் கொண்டுவரப்படவுள்ளது. உங்கள் வாட்ஸ்அப் கணக்கிற்கு இந்த வசதி வந்தவுடன் செயலியிலேயே நோட்டிபிகேஷன் (Notification) மூலம் உங்களுக்குத் தெரிவிக்கப்படும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *