சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவரசா அனோஜனுக்கு பொதுமன்னிப்பைப் பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கம் தொடர்ச்சியான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (22) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்தச் சம்பவம் முதலில் பதிவானது முதல் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் ஊடாக அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் தொடர்ச்சியான தலையீடுகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
சிவரசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி அவரது தண்டனையைக் குறைக்குமாறு கோரி சவூதி அரேபிய மன்னருக்கு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க முறையான கோரிக்கையொன்றை அனுப்பி வைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், ஜனாதிபதியின் இந்தக் கோரிக்கையை சவூதி அதிகாரிகளிடம் நேரடியாகக் கையளிப்பதற்காக பிரதி சபாநாயகர் தலைமையிலான நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் குழுவொன்றை அனுப்பி வைக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த வழக்கு தொடர்பான முழுமையான சட்டச் செலவுகளையும் அரசாங்கமே ஏற்கத் தீர்மானித்துள்ளது. ஏற்கனவே செலவிடப்பட்ட தொகையை மீள வழங்குதல் மற்றும் எதிர்காலச் செலவுகளை ஈடுகட்டுதல் ஆகியனவும் இதில் உள்ளடங்குகின்றன.
ஜனாதிபதி சட்டத்தரணிகளான உப்புல் குமாரப்பெரும மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் தமது சொந்தச் செலவிலேயே இதற்கான சட்ட உதவிகளை வழங்கி, வழக்கை மீளாய்வு செய்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் ஜனாதிபதி நேற்று அனோஜனின் குடும்பத்தினருடன் கலந்துரையாடியுள்ளார். அத்துடன், அவரை மரண தண்டனையிலிருந்து மீட்கும் சாத்தியமான நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக சட்டமா அதிபர் திணைக்களம், வெளிவிவகார அமைச்சு மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இதற்கு முன்னரும் தனியானதொரு சந்திப்பு நடத்தப்பட்டிருந்தது.
சிவரசா அனோஜனுக்கு உதவுவதற்காக இராஜதந்திர, சட்ட மற்றும் அரசியல் ரீதியான அனைத்து வழிகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் வலியுறுத்தியுள்ளார்.
