டிஜிட்டல் மார்க்கெட்டிங், படைப்பாற்றல், தொழில்நுட்பம் மற்றும் வணிகத் துறைகளில் ஆசிய பிராந்தியத்தின் முன்னணிச் சிந்தனையாளர்களை ஒன்றிணைக்கும் “Digital Summit Asia Sri Lanka 2026” மாநாடு அடுத்த மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளது.
இலங்கை டிஜிட்டல் மார்க்கெட்டிங் சங்கத்தினால் (Digital Marketers Association of Sri Lanka – DMASL) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இருநாள் மாநாடு, அக்டோபர் மாதம் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் கொழும்பிலுள்ள Water’s Edge ஹோட்டலில் நடைபெறும்.
“The Epicentre” (மையப்புள்ளி) எனும் கருப்பொருளில் நடைபெறும் இந்தச் உச்சிமாநாடு, இலங்கை மற்றும் ஆசியா முழுவதிலும் உள்ள படைப்பாளர்கள், தொழில்முனைவோர், சந்தைப்படுத்துபவர்கள் (marketers), தொழில்நுட்பத் தலைவர்கள் மற்றும் வணிக நிபுணர்களை ஒரே தளத்தில் ஒன்றிணைக்கவுள்ளது. கருத்துப் பரிமாற்றம், ஒத்துழைப்பு மற்றும் அறிவைப் பகிர்வதற்கான ஒரு பிராந்திய தளத்தை உருவாக்குவதையும், ஆசியாவின் டிஜிட்டல் நிலப்பரப்பை வடிவமைக்கும் முன்னணி நபர்களுடன் இலங்கை நிபுணர்களை இணைப்பதையும் இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மாநாட்டுத் திட்டத்தில் முக்கிய உரைகள், ஊடாடும் அமர்வுகள், பணிமனைகள் (workshops), வட்டமேசை விவாதங்கள் மற்றும் குழு விவாதங்கள் (panel conversations) ஆகியவை இடம்பெறவுள்ளன.
செயற்கை நுண்ணறிவு (AI), கிரியேட்டர் எகானமி (creator economy), வர்த்தக முத்திரை கட்டமைப்பு (brand building), சந்தைப்படுத்தல் செயற்திறன், கதை சொல்லல் (storytelling), புதுமை மற்றும் டிஜிட்டல் விளம்பரத்தின் எதிர்காலம் ஆகியவை முக்கிய தலைப்புகளாக விவாதிக்கப்படும். மேலும், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத்துறைக்கு இடையிலான வளர்ந்து வரும் தொடர்பு குறித்தும், சுற்றுலாத் தலங்கள் மற்றும் விருந்தோம்பல் பிராண்டுகள் எவ்வாறு பார்வையாளர்களுடன் இணைகின்றன என்பது குறித்தும் பிரத்தியேக அமர்வுகள் நடைபெறும்.
TikTok, Uber, Publicis Groupe, Yell Worldwide, Voxxy Media மற்றும் Dot Media உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் தொழில்துறைத் தலைவர்கள் சர்வதேச பேச்சாளர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.
DMASL தலைமைக் குழுவினரான தலைவர் அர்ஜுன் ஜேகர், துணைத் தலைவர்கள் மற்றும் மாநாட்டின் இணைத் தலைவர்களான காயத்ரி செனவிரத்ன மற்றும் ஷலேந்திர மெண்டிஸ், செயலாளர் உதர தர்மசேன மற்றும் பொருளாளர் முஹம்மது கஸ்ஸாலி ஆகியோரால் இந்த மாநாடு வழிநடத்தப்படுகிறது.
மகாராஜா மீடியா நெட்வொர்க் (Maharaja Media Network) Digital Summit Asia Sri Lanka 2026 இன் உத்தியோகபூர்வ இலத்திரனியல் ஊடகப் பங்காளராக (Official Electronic Media Partner) அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் புத்தாக்கம் பிராந்தியத்தின் எதிர்காலத்தை எவ்வாறு வடிவமைக்கிறது என்பதை ஆராய்வதற்கும், பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் இந்த நிகழ்வு ஒரு சிறந்த தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
