இலங்கையில் 2026 ஆம் ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 97,027 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், நடப்பு செப்டம்பர் மாதத்தில் மட்டும் இதுவரை 1,536 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த ஆண்டில் இதுவரை டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு மொத்தம் 74 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாகாண ரீதியில் பார்க்கையில், மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அங்கு மொத்தம் 51,180 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக தென் மாகாணத்தில் 14,036 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 8,958 நோயாளர்களும், சபரகமுவ மாகாணத்தில் 7,998 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 20,622 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 19,168 பேரும், கண்டி மாவட்டத்தில் 7,199 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 6,186 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 6,218 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது நாடு முழுவதிலும் உள்ள 40 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகள் அதிக ஆபத்துள்ள மண்டலங்களாக (High-Risk Zones) அடையாளம் காணப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
