Headlines

உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் டிஜிட்டல் மயமாக்கல்: ஜனாதிபதி தலைமையில் முக்கிய கலந்துரையாடல்.

பொது சேவைகளை உள்ளடக்கிய ஒற்றை தேசிய டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அரசாங்கத்தின் டிஜிட்டல் உருமாற்ற வேலைத்திட்டம் தொடர்பில் இன்று (29) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்திலேயே அவர் இந்தப் பணிப்புரையை வழங்கியுள்ளார். பொதுமக்களுக்கு துரிதமாகவும், வினைத்திறனாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயமாக்குவது குறித்து இக்கூட்டத்தில் முக்கியமாக ஆராயப்பட்டது.

பல்வேறு அரச நிறுவனங்களால் தனித்தனியாக இயக்கப்படும் டிஜிட்டல் கட்டமைப்புகளுக்குப் பதிலாக, முழுமையான பொதுச் சேவையையும் உள்ளடக்கிய ஒற்றை தேசிய கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார். இதற்காகப் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியன இணைந்து செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார். அத்துடன், இந்த தேசிய முறைமையின் மேம்பாட்டிற்காக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் மூன்று அதிகாரிகள் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றங்களால் வழங்கப்படும் வரி அறவீடுகள், விளம்பரப் பலகைகளுக்கான கட்டணங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பொது மண்டபங்களின் முன்பதிவுகள், கடை வாடகைகள் மற்றும் நீர்க் கட்டணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய டிஜிட்டல் சேவைகள் குறித்தும் இங்கு மீளாய்வு செய்யப்பட்டது. அத்துடன், அனுமதிப் பத்திரங்களைப் பெறுவதற்கான டிஜிட்டல் வழிமுறைகள் மற்றும் GovPay போன்ற டிஜிட்டல் கட்டண முறைமைகளை மேம்படுத்துவது குறித்தும் அதிகாரிகள் ஆராய்ந்தனர்.

பிரதேச செயலகங்கள் மட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட சேவைகள் டிஜிட்டல் மயமாக்கலுக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. பொலன்னறுவை மாவட்டத்தில் நெல் கொள்வனவு மற்றும் அனர்த்த நிவாரணம் போன்ற செயற்பாடுகளில் பெறப்பட்ட அனுபவங்களை உள்ளடக்கி நடைமுறைப்படுத்தப்படும் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறைகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இதற்கமைய, தெரிவு செய்யப்பட்ட ஒரு மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட முழுமையான மாதிரி கட்டமைப்பை முதலில் நிறுவுமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

மேலும், அரச அதிகாரிகளின் நியமனம் முதல் ஓய்வு வரையான முழுமையான நிர்வாகச் செயற்பாடுகளை நிர்வகிப்பதற்காக உருவாக்கப்பட்டு வரும் ‘GovHR’ டிஜிட்டல் கட்டமைப்பு குறித்தும் கூட்டத்தில் ஆராயப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் டிஜிட்டல் பொருளாதாரப் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜயசூரிய உள்ளிட்ட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *