கொழும்பு நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கிலும், பொதுமக்களுக்கு மிகவும் வசதியானதும் பாதுகாப்பானதுமான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் வகையிலும் 112 புதிய மெட்ரோ பஸ்கள் (Metro Buses) இன்று (29) சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய பஸ் சேவையை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்கள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
மேல் மாகாணத்தில் உள்ள 7 பிரதான வழித்தடங்களை உள்ளடக்கும் வகையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த 112 மெட்ரோ பஸ்களை பயணிகள் சேவையில் இணைக்கும் நிகழ்வு இன்று காலை தலங்கம மெட்ரோ பஸ் டிப்போ வளாகத்தில் ஜனாதிபதியின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த புதிய பஸ் சேவையின் ஊடாக பயணிகள் நெரிசல் மிகுந்த நேரங்களில் எவ்வித அசெளகரியங்களுமின்றி தமது பயணங்களை இலகுவாக மேற்கொள்வதற்கு முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடியை தணிப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக இந்த திட்டம் ஜனாதிபதியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
