இலங்கையின் நிர்மாணத் துறையில் தற்போது நிலவும் தடைகளை நீக்கி, அத்துறையை மீண்டும் வலுவாகக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார். நிர்மாணத் துறையானது நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் தேசிய அபிவிருத்திக்கு நேரடியாகப் பங்களிப்பதே இதற்கு முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (செப்டெம்பர் 30) நிர்மாணத் துறை சார்ந்த முக்கிய பிரதிநிதிகளுடன் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நிர்மாணத் துறையின் தற்போதைய நிலை மற்றும் எதிர்காலப் போக்குகள் குறித்து இந்த சந்திப்பில் மீளாய்வு செய்யப்பட்டது. அத்துடன், துறையில் உள்ள தடைகளைத் தாண்டி, அதன் நிலைபேறான வளர்ச்சியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து துறையின் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி ஆலோசனைகளைக் கோரியுள்ளார்.
நிர்மாணத் துறை தற்போது எதிர்கொண்டுள்ள பல முக்கிய சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து துறைசார் பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர். இந்தப் பிரச்சினைகளுக்கு விரைவான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற தீர்வுகளை வழங்குவதற்காக அரசாங்கம் மேற்கொள்ளக்கூடிய தலையீடுகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. தடைகளைச் சரியாக அடையாளம் கண்டு அவற்றைத் தீர்ப்பதன் ஊடாக நிர்மாணத் துறையில் புதிய எழுச்சியை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதன்போது மீண்டும் வலியுறுத்தினார்.
இந்த முக்கிய கலந்துரையாடலில் தொழில் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும மற்றும் நிர்மாணத் துறை பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
