Headlines

அமெரிக்காவின் தன்னிச்சையான வரிக் கொள்கைகளுக்குப் பதிலடி: பிரிக்ஸ் மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள்!

டெல்லியில் நடைபெற்று முடிந்த 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிக் கொள்கைகள் மற்றும் ஒருதலைப்பட்சமான வர்த்தக நடவடிக்கைகளுக்கு எதிராக உறுப்பு நாடுகள் தங்களது பலத்த கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளன.

இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா மற்றும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகள் பங்கேற்ற இந்த மாநாட்டில், அமெரிக்கா பிற நாடுகளின் இறக்குமதிப் பொருட்கள் மீது விதித்து வரும் கூடுதல் வரிகள் மற்றும் பொருளாதாரக் கட்டுப்பாடுகள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. டொனால்ட் டிரம்பின் இத்தகைய அதிரடி வரிக் கொள்கைகள் மற்ற நாடுகளைப் பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக, எல்லை மோதல்கள் மற்றும் முரண்பாடுகளைக் கொண்டிருந்த பிரிக்ஸ் நாடுகளைப் பொருளாதார ரீதியாக ஒன்றாகக் கைகோர்க்க வைத்துள்ளன.

மாநாட்டின் முடிவில் ஒருமனதாக வெளியிடப்பட்ட ‘புது தெல்லி பிரகடனம் 2026’, உலக வர்த்தக அமைப்பின் (WTO) விதிகளுக்கு மாறாக அமெரிக்கா தன்னிச்சையாக கூடுதல் வரிகளை விதிப்பதையும், வர்த்தகத் தடைகளை ஏற்படுத்துவதையும் சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளது. இத்தகைய வரி அச்சுறுத்தல்கள் சர்வதேச விநியோகச் சங்கிலியை உடைத்து, ஏழை மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைப் பெருமளவில் பாதிக்கும் என உறுப்பு நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

அமெரிக்கா தனது டாலர் ஆதிக்கத்தையும் வரிக் கொள்கைகளையும் பயன்படுத்தி பிற நாடுகள் மீது நிதி நெருக்கடியை ஏற்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில், பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்குடையேயான வர்த்தகத்தில் அமெரிக்க டாலரைத் தவிர்த்து, ரூபாய் மற்றும் யுவான் போன்ற சொந்த நாட்டு நாணயங்களிலேயே பணப் பரிவர்த்தனை செய்யத் தீர்மானித்துள்ளன. இதற்காக ‘பிரிக்ஸ் பேமெண்ட் டாஸ்க் போர்ஸ்’ தொழில்நுட்ப ரீதியாக வலுப்படுத்தப்பட்டு வருகிறது.

டொனால்ட் டிரம்பின் கடுமையான வர்த்தக மற்றும் வரிக் கெடுபிடிகள், பிரிக்ஸ் அமைப்பைத் தனிமைப்படுத்துவதற்குப் பதிலாக, அந்த நாடுகளிடையே இதுவரை இல்லாத அளவிலான ஒரு வலுவான ஒற்றுமையையும் தற்சார்புப் பாதையையும் உருவாக்கியுள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *