ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தினால் எயார்பஸ் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான பணச் சலவை விசாரணையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தேசிய விமானச் சேவையின் எயார்பஸ் கொள்வனவு செயல்முறையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வரும் நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எயார்பஸ் விமானக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை குறித்த முன்னேற்ற அறிக்கையை 2026 ஒக்டோபர் 13 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு (CIABOC) உத்தரவிட்டிருந்தது.
கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
விசாரணையின் போது, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதன் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை சமர்ப்பித்ததுடன், விசாரணை குறித்துத் தொடர்ந்து அறிக்கை சமர்ப்பிக்க மேலதிக திகதியைக் கோரியது.
இந்த வழக்கின் முதலாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) கபில சந்திரசேன, அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இரண்டாவது சந்தேகநபரான அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் மகனுமான மூன்றாவது சந்தேகநபர் ஷமிந்திர ராஜபக்ஷ ஆகியோரைக் கைது செய்ய நீதிமன்றம் இதற்கு முன்னர் பிடிவிறாந்து பிறப்பித்திருந்தது.
சமர்ப்பணங்களைப் பரிசீலித்த கொழும்பு பிரதம நீதவான், வழக்கின் அடுத்த விசாரணையை ஒக்டோபர் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், அன்றைய தினம் விசாரணையின் முன்னேற்றம் குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்குப் பணிப்புரை விடுத்தார்.
