இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்ட முன்னாள் முதல் பெண்மணியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியுமான ஷிரந்தி ராஜபக்ஷ, எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர் இன்று (07) ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதேவேளை, இதே வழக்குடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த தேசிய சேமிப்பு வங்கியின் (NSB) முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவருமான பிரதீப் காரியவசம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கிருலப்பனை, பூர்வாராம வீதியில் அமைந்துள்ள ஷிரந்தி ராஜபக்ஷவின் இல்லத்தில் வைத்து, இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரது இல்லத்தில் வைத்து சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னரே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
‘சிரிளிய சவிய’ (Siriliya Saviya) நிதியத்துடன் தொடர்புடைய கணக்கொன்றின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட சந்தேகத்திற்குரிய கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிகிச்சைக்காக கடந்த செப்டெம்பர் 16 ஆம் திகதி சிங்கப்பூர் சென்றிருந்த ஷிரந்தி ராஜபக்ஷ, மலேசியாவிலிருந்து கடந்த திங்கட்கிழமை (05) இரவு இலங்கை திரும்பியிருந்தார். அவர் நாடு திரும்பியதும், எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகுமாறு பொலிஸார் அறிவித்திருந்தனர்.
முன்னதாக, ‘சிரிளிய சவிய’ அமைப்பின் நிதி விவகாரம் தொடர்பான விசாரணைகளில் தம்மைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி, அவரது சட்டத்தரணிகள் கடந்த திங்கட்கிழமை (05) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன் பிணை (Anticipatory Bail) மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
