Headlines

தொலைபேசி, மடிக்கணினியின் கடவுச்சொற்களை மறந்துவிட்டதாக சுரேஷ் சலே அறிவிப்பு: மாற்று வழிகளில் அவற்றைத் திறக்க நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலேயை எதிர்வரும் செப்டெம்பர் 28 ஆம் திகதி வரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறுமாறு வைத்தியசாலையின் மருத்துவ சபை பரிந்துரைத்துள்ளது.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய, நீதிமன்றத்தில் முன்னிலையான இலங்கை தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் குறித்த மருத்துவ அறிக்கையைச் சமர்ப்பித்த போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலை பணிப்பாளர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், செப்டெம்பர் 28 ஆம் திகதிக்குள் சலேயின் உடல்நிலை குறித்த புதிய மருத்துவ மதிப்பீடு பெறப்படும் என நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இதற்கிடையில், சுரேஷ் சலே தனது கையடக்கத் தொலைபேசி மற்றும் மடிக்கணினியின் கடவுச்சொற்களை (Passwords) மறந்துவிட்டதாகக் கூறி, அதனை வழங்குவதற்குத் தொடர்ந்து மறுத்து வருவதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தார். இந்த விடயங்களை ஆராய்ந்த நீதவான், மாற்று வழிகள் ஊடாக குறித்த சாதனங்களை அணுகுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அரச ஊழியர் என்ற அடிப்படையில் தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களம் முன்னிலையானதாகப் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இதன்போது விளக்கமளித்தார். அதேவேளை, சுரேஷ் சலே தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை ஒரு ‘மருத்துவச் சதி’ என முன்னதாகத் தெரிவிக்கப்பட்ட நிலைப்பாட்டையே அவர் தொடர்ந்தும் பேணியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *