ஃபிளைதுபாய் (Flydubai) விமானத்தில் 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானியான கப்டன் ஸ்மித் மச்சாரின் தைரியத்தைப் பாராட்டி, அவரை ஒரு “கதாநாயகன்” என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
குறித்த விமானத்தின் துணை விமானி, கத்தியால் தாக்குதல் நடத்தி விமானத்தை விபத்துக்குள்ளாக்க முற்பட்டுள்ளார். எனினும், பலத்த காயங்களுக்கு மத்தியிலும் குறித்த துணை விமானியின் தாக்குதலைத் துணிச்சலாக எதிர்கொண்ட கப்டன் ஸ்மித் மச்சார், விமானியின் அறைக்கதவைத் (cockpit door) திறந்து மற்றவர்களிடம் உதவி கோரியுள்ளார். அவரது இந்த துரித மற்றும் துணிச்சலான செயற்பாட்டினால் விமானத்தை விபத்துக்குள்ளாக்கும் சதி முறியடிக்கப்பட்டு 174 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “கப்டன் ஸ்மித் மச்சார் ஒரு கதாநாயகன். பாரிய ஆபத்துக்கு மத்தியிலும், படுகாயமடைந்த நிலையிலும் மற்றவர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக அவர் காட்டிய தைரியமும் அசைக்க முடியாத உறுதியும் அளப்பரியது. அவரது வீரம் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியதுடன் ஒரு பெரிய சோகத்தையும் தவிர்த்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “கப்டன் மச்சார் குறித்து ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமையடைகிறது. அவர் விரைவில் குணமடையவும், நல்ல ஆரோக்கியத்துடன் மீண்டும் பலம் பெறவும் பிரார்த்திக்கிறேன்” எனவும் பிரதமர் மோடி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
