Headlines

சீன உரம் இறக்குமதி; முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மீதான வழக்கு டிசம்பர் 4க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தின் போது, தரம் குறைந்த சேதனப் பசளை (organic fertilizer) இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் அரசாங்கத்திற்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் 6.7 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான இழப்பு குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

சீன நிறுவனமொழியிடமிருந்து 20,000 மெட்ரிக் தொன் தரம் குறைந்த சேதனப் பசளையை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் ஏனைய சந்தேக நபர்களுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதகம முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மற்றொரு வழக்குத் தொடர்பில் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் அலுத்கமகே, சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருவதாகவும், விசாரணையை முடித்து உரிய அறிக்கைகளைச் சமர்ப்பிக்க மேலதிக காலம் தேவை என்றும் CIABOC அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.

சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொண்ட பிரதான நீதவான், டிசம்பர் 4ஆம் திகதி வழக்கை மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு CIABOCக்கு உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *