வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று தாய்லாந்து புறப்பட்டுச் செல்லவுள்ளார்.
தாய்லாந்தின் தொழிலாளர் அமைச்சரின் அழைப்பிற்கு இணங்க, அமைச்சர் விஜித ஹேரத் இன்றிலிருந்து நாளை மறுதினம் (16) வரை தாய்லாந்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது, அமைச்சர் விஜித ஹேரத் தாய்லாந்தின் தொழிலாளர் அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் பதில் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து இந்தக் கலந்துரையாடல்கள் மையமாக அமையும்.
தொழிலாளர் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், தொழிலாளர் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தாய்லாந்தில் இலங்கைத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு குறித்த உடன்படிக்கை ஆகியவை கையெழுத்திடப்படும் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த விஜயமானது சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு, இடம்பெயர்வு மற்றும் தொழிலாளர் நடமாட்டம் ஆகிய துறைகளில் நடைமுறைச் சாத்தியமான ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இரு நாட்டு மக்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தவும், இலங்கை மற்றும் தாய்லாந்து இடையிலான இருதரப்பு பொருளாதார உறவுகளை மேம்படுத்தவும் வாய்ப்பாக அமையும்.
