நியூயோர்க்கில் நடைபெறும் 81வது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA81) பக்கவாட்டில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸை (António Guterres) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய பொருளாதார மீட்சி, சீர்திருத்த வேலைத்திட்டங்கள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் குறித்து முக்கியமாகக் கவனம் செலுத்தப்பட்டது. வளரும் நாடுகளுக்கு அதிக ஆதரவை வழங்கும் நோக்கிலான சர்வதேச நிதி கட்டமைப்பின் சீர்திருத்தங்கள் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். அத்துடன், ஐ.நா அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான இலங்கையின் பங்களிப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஐ.நா பொதுச்செயலாளருடனான இந்தச் சந்திப்பு மிகவும் ஆக்கபூர்வமாக அமைந்திருந்ததாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இதேவேளை, அணு ஆயுதங்களை முற்றாக ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்திலும் வெளிவிவகார அமைச்சர் பங்கேற்றார். அணு ஆயுத ஒழிப்பிற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை அங்கு மீள வலியுறுத்திய அவர், அணு ஆயுதங்களை முற்றாக ஒழிப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்தார். மேலும், ஆயுதங்களுக்கான வளங்களை சுகாதாரம், கல்வி, காலநிலை நடவடிக்கை மற்றும் நிலையான அபிவிருத்திக்குத் திருப்புவதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்குப் புறம்பாக, ஐ.நாவின் செயற்பாட்டு ஆதரவுக்கான பிரதிப் பொதுச்செயலாளர் அதுல் கரேயையும் (Atul Khare) அமைச்சர் விஜித ஹேரத் சந்தித்தார். ஐ.நா அமைதி காக்கும் படையில் பணியாற்றும் இலங்கை வீரர்களுக்கு வழங்கப்படும் ஆதரவிற்கு அமைச்சர் இதன்போது பாராட்டுத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
