Headlines

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் புதிய சீனத் தூதுவர் விசேட சந்திப்பு!

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாக்சியாங், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று (09) காலை கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

கடந்த ஓகஸ்ட் 25ஆம் திகதி தனது நற்சான்றிதழ்களைக் கையளித்ததையடுத்து, இலங்கைக்கான சீனத் தூதுவராகப் பொறுப்பேற்றுள்ள வெய் ஹுவாக்சியாங்கிற்கு முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ இந்தச் சந்திப்பின் போது தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளரான சட்டத்தரணி சாகர காரியவசமும் கலந்துகொண்டார்.

இந்தச் சந்திப்பின் போது, சீன நாகரிகத்தின் செழுமையை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில், பாரம்பரிய சீன ஓவியங்களைக் கொண்ட விசேட புத்தகமொன்றை தூதுவர் வெய் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு வழங்கி வைத்தார்.

தூதுவருக்கு தனது நன்றியைத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் நட்பு மற்றும் மூலோபாய ரீதியான கூட்டாண்மைப் பயணத்தை நினைவுகூர்ந்ததுடன், இலங்கை மக்களையும் கலாச்சாரத்தையும் சீனா அரவணைப்பதையிட்டும் மகிழ்ச்சி வெளியிட்டார். அத்துடன், இலங்கைக்கு சீனா வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவிற்கும் அவர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *