விமர்சனம்: ஹாய் பதிப்பு: வியாழன், ஆகஸ்ட் 27, 2026, நடிப்பு: கவின், நயன்தாரா, பிரபு, பாக்யராஜ், ராதிகா சரத்குமார், சுஹாசினி, ஃபெப்சி விஜயன் இயக்கம்: விஷ்ணு எடவன்
சென்னை: பாடலாசிரியர் விஷ்ணு எடவன் எழுதி இயக்கியுள்ள ‘ஹாய்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. லலித் குமார் மற்றும் நயன்தாரா இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் கவின் மற்றும் நயன்தாரா முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். டாக்ஸிக் படத்தைத் தொடர்ந்து இந்த வாரத்தின் மற்றொரு பெரிய வெளியீடாக ‘ஹாய்’ அமைந்திருக்கிறது.
கதைச் சுருக்கம்:
காதலிக்கவும் திருமணம் செய்யவும் சரியான பெண் கிடைக்காததால் தற்கொலைக்கு முயற்சி செய்யும் அளவிற்குச் செல்லும் ‘மயில்சாமி’ என்ற கதாபாத்திரத்தில் கவின் கச்சிதமாகப் பொருந்தி நடித்துள்ளார். கடன் பிரச்சனை காரணமாகப் பிடிக்காத, அதுவும் பெண்களை அடித்துத் துன்புறுத்தும் ஒருவரைத் திருமணம் செய்ய மறுத்து ஊரை விட்டு ஓடி வரும் ‘தேவயானியாக’ நயன்தாரா அழகில் மிளிர்கிறார்.
மயில்சாமி தேவயானியிடம் தனது காதலைச் சொல்ல முயல்கிறார். ஆனால், ஆண்களைப் பற்றித் தவறாக நினைக்கும் தேவயானியிடம், கைகளில் வைத்திருந்த ரோஜாவைத் தூக்கி எறிந்துவிட்டு, வெறும் தோழனாகவே பழகுகிறார். ஒரு கட்டத்தில், தேவயானியைக் காப்பாற்ற, அவர்கள் இருவரும் காதலிப்பதாகவும், தேவயானி கர்ப்பமாக இருப்பதாகவும் மயில்சாமி தேவயானியின் மொத்த குடும்பத்தையும் ஏமாற்றுகிறார். மயில்சாமி கடைசி வரை தனது காதலை தேவயானியிடம் சொன்னாரா? இந்த நாடகத்தால் என்ன ஆனது? குடித்துக் கொண்டே வாழும் நயன்தாராவின் அப்பாவாக பிரபுவின் நிலை என்ன ஆனது? இதுவே ‘ஹாய்’ படத்தின் ஹைக்கூ கதை.
படம் எப்படி இருக்கு?
கோவைத் தமிழில் உருளைக் கண்ணாடி அணிந்து கொண்டு, முதல் பாதி முழுவதும் கவின் பேசுவதும் நடிப்பதும் ரசிகர்களை வெகுவாகக் கவர்கிறது. ட்ரூத் ஆர் டேர் சவாலுக்காக நயன்தாராவும் கவினும் ரெட் லைட் ஏரியாவுக்குச் செல்லும் இடமெல்லாம் காமெடி கச்சிதமாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. முதல் பாதி முழுக்க இருவருக்கும் இடையேயான நட்பு எந்த நொடியில் காதலாக மாறுகிறது என்பதைக் காட்டும் தருணம் அருமை.
இரண்டாம் பாதியில் படம் அப்படியே தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் ஸ்டைலில் மாறுகிறது. இந்தப் படத்திலும் பாக்யராஜ் ஹீரோவின் அப்பாவாக நடித்து ஸ்கோர் செய்கிறார். “என்ன மட்டும் இல்ல, எனக்கு ஒன்னுன்னா எங்கப்பா எல்லாரையும் அடிப்பார்” என்று வசனம் பேசிவிட்டு பாக்யராஜ் சாரை ஸ்கோர் செய்ய விட்ட இடம் சூப்பர். பெயர் மட்டுமில்லை, ஆளே பரிசுத்தம் என நினைக்கும் நயன்தாராவிடம் ஃபெப்சி விஜயன் பேசும் இடமெல்லாம் அப்ளாஸ் அள்ளுகிறது. சண்முகி டாக்டராக வந்து வடிவேலுவின் சந்திரமுகி காமெடி, துருவ் விக்ரம் குரலில் கிளைமேக்ஸுக்கு முன்னதாக வரும் “குடிகார நெஞ்சு” பாடல் என ஏகப்பட்ட விஷயங்கள் படத்தை ஜாலியாகவும் ஃபீல் குட்டாகவும் கொண்டு செல்கின்றன.
பிளஸ்:
கவின், நயன்தாரா, ராதிகா சரத்குமார், பாக்யராஜ், பிரபு என நடிகர்களின் தேர்வே இந்தப் படத்தைக் கச்சிதமாகக் காப்பாற்றியுள்ளது. கணபதி இல்லை தளபதி, உயிருள்ளவரை உஷா என ஏகப்பட்ட சினிமா ரெஃபரன்ஸுகளும் கதைக்கு பலம் சேர்க்கின்றன. ஜென் மார்ட்டின் இசையில் ரசகுல்லா பாடலும் குடிகார நெஞ்சு பாடலும் இமிடியேட் ஹிட்டாகின்றன. பின்னணி இசை காமெடி காட்சிகளில் சிரிக்கவும், எமோஷனல் காட்சிகளில் ஃபீல் செய்யவும் வைத்துள்ள விதம் சிறப்பு. ரஜினி, கமல் எல்லாம் தேவையில்லை மயில்சாமி போதும் எனச் சொல்லும் இடம் ஒருவன் உண்மையாக அன்பு செலுத்தினாலே பெண்களுக்குப் பிடிக்கும் என்கிற விஷயத்தைக் கடத்த இயக்குநர் செய்த விஷயம் பாராட்டுக்குரியது.
மைனஸ்:
முதல் பாதியில் சில இடங்களில் இடம்பெற்ற டிராமாக்கள் பெரிதாக ஒட்டவில்லை என்றாலும், ஃபிரெஷ்ஷாக இருந்தது. படத்தின் பலமே 2வது பாதி தான். ஆனால், முதல் பாதியில் வந்த மயில்சாமி 2வது பாதியில் பல இடங்களில் கவினாகவே வந்து செல்வது போன்ற உணர்வு ஏற்படுவதும், நயன்தாரா வெள்ளந்தியாக இருக்க பிரபு தான் காரணம் என்று சிம்பிளாக கடந்து செல்வது பெரிதாக கனெக்ட் ஆகவில்லை. கிளைமேக்ஸ் காட்சியில் சுஹாசினி வரும் இடங்களையும் இன்னும் பெட்டராக ஸ்டேஜிங் செய்திருக்கலாம்.
பார்க்கலாமா? வேண்டாமா?
டாக்ஸிக் படத்தில் நடித்த நயன்தாராவா இது என வாயைப் பிளக்க வைக்கும் அளவுக்கு மிக அழகாக நடித்துள்ளார். யாரடி நீ மோகினி படத்தில் அவருக்கு ரெட் சாரி தான் அழகா சூட் ஆகும் எனத் தனுஷ் சொல்வது போல, இங்கே ஒயிட் சுடிதார் குறித்து கவின் சொல்லும் இடமெல்லாம் க்யூட்டாக உள்ளது. ரத்தம் தெறிக்கும், ஆபாச ஆக்ஷன் படங்களைப் பார்த்து தலைவலித்தால், கண்டிப்பாக நல்ல தலைவலி தைலமாக ஒரு ஃபீல் குட் படமாகவே இந்தப் படம் அழகாக உருவாகியுள்ளது. தாராளமாக தியேட்டரில் பார்க்கலாம். இந்த படத்திற்கு இதயம் முரளி டைட்டில் கூட செமையா செட்டாகும்.
