Headlines

23,270 குற்றச்சாட்டுகள், 5 வருட விசாரணை: ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு நாளை வெளியீடு.

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில், நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பேருக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை (22) வழங்கப்படவுள்ளது.

சுமார் ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணைகள் கடந்த ஓகஸ்ட் 24 ஆம் திகதி முடிவடைந்த நிலையில், தீர்ப்பை நாளை வழங்குவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் திகதி நிர்ணயித்துள்ளது. இந்த வழக்கு நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்ஸங்க ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.

இந்த நீண்ட விசாரணையின் போது, 24 எதிரிகளுக்கும் எதிராக 23,270 குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டதோடு, அரச தரப்புக்காக 2,309 சாட்சிகள் சாட்சியமளித்தனர். இதனிடையே, விசாரணையின் போது குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர்களால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட 10 ஒப்புதல் வாக்குமூலங்களை சாட்சிகளாக ஏற்றுக்கொள்ள முடியும் என நீதிமன்றம் இதன்போது தீர்ப்பளித்திருந்தது. இதற்கு மேலதிகமாக, அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகள், டி.என்.ஏ (DNA) அறிக்கைகள் மற்றும் உயிரிழந்தவர்கள் தொடர்பான சட்ட வைத்திய அதிகாரிகளின் அறிக்கைகளும் சாட்சிகளாக முன்வைக்கப்பட்டன. வெடிபொருட்கள், வெடிபொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள், வாள்கள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளிட்ட 2,076 தடயப் பொருட்கள் அரச தரப்பினால் சமர்ப்பிக்கப்பட்டமை இந்த விசாரணையின் மற்றொரு முக்கிய அம்சமாகும்.

கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்களை இலக்கு வைத்து 2019 உயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்தச் சதி செய்தமை, அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரினால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக நௌபர் மௌலவி (மொஹமட் இப்ராஹிம் மொஹமட் நௌபர்), மொஹமட் சரீப் ஆதம் லெப்பை, ஹயத்து மொஹமட் அஹமட் மில்ஹான், மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா, மொஹமட் இப்ராஹிம் சாஹித் அப்துல் ஹக், மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான், மொஹமட் மன்சூர் மொஹமட் சம்சுதீன், அப்துல் மனாப் மொஹமட் பிக்ரோஸ், மொஹமட் ரமீஸ் மொஹமட் சஜித், அப்துல் லத்தீப் மொஹமட் ஷாபி, உசைனுல் ரிஸ்வி காலித் சமீர், மொஹமட் சவாஹிர் மொஹமட் ஹசன், மொஹமட் இப்திகார் மொஹமட் இன்சாப், ரஷீத் மொஹமட் இப்ராஹிம், மொஹமட் ஹனீபா ஜைனுல் ஆப்தீன், மொஹமட் முஸ்தபா மொஹமட் ஹாரிஸ், கச்சி மொஹமட் மொஹமட் ஜெம்சித், ஜைனுல் ஆப்தீன் மொஹமட் ஜஸீம், மொஹமட் முஸ்தபா மொஹமட் ரிஸ்வான், மீரா சாஹிப் மொஹமட் நப்லி, மொஹமட் அமீர் மொஹமட் ஆயத்துல்லா, மொஹமட் அன்சாதீன் மொஹமட் இல்மி மற்றும் மொஹமட் அக்ரம் அஹக்கம் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *