Headlines

அமெரிக்க பசிபிக் விமானப்படைத் தளபதி கெவின் சினைடர் இலங்கை விஜயம்

அமெரிக்க பசிபிக் விமானப்படையின் (PACAF) தளபதி ஜெனரல் கெவின் சினைடர் (Kevin Schneider) மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (21) இலங்கை வந்தடைந்தார்.

இந்த விஜயமானது அமெரிக்கா மற்றும் இலங்கை இடையேயான பலப்பட்டு வரும் பாதுகாப்பு கூட்டாண்மையை பிரதிபலிக்கிறது என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

தனது விஜயத்தின் போது, ஜெனரல் சினைடர் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை விமானப்படையின் சிரேஷ்ட தலைவர்கள் உட்பட இலங்கை அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இச்சந்திப்புகளில், வான் மற்றும் கடல்சார் கண்காணிப்பு, சைபர் பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும்.

ஜெனரல் சினைடரின் இந்த விஜயமானது கூட்டுப் பயிற்சிகள், இராணுவப் பரிமாற்றங்கள் மற்றும் தொடர்ந்து நடைபெற்று வரும் சிரேஷ்ட அளவிலான பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையேயான விரிவடைந்து வரும் இருதரப்பு உறவில் ஒரு புதிய மைல்கல் என தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்பை நிலைநிறுத்துவதற்கான கூட்டு முயற்சிகளில் இலங்கையை அமெரிக்கா ஒரு இன்றியமையாத பங்காளியாக அங்கீகரிக்கிறது என்றும் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *