Headlines

சீரற்ற வானிலை தொடரும்: பலத்த காற்றுடன் 100 மி.மீ. இற்கும் அதிக மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது!

இந்தியாவின் கிழக்குக் கரையை கடந்து செல்லும் ஆழ்ந்த தாழமுக்கத்தின் தாக்கத்தினால் மழை நிலைமை தொடரும் என்பதால், இன்று (24) இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தனது சமீபத்திய வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. இப்பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி பதிவாக வாய்ப்புள்ளது.

இதற்கிடையில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள இந்த ஆழ்ந்த தாழமுக்கமானது தற்போது இந்தியாவின் வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைகளைக் கடந்து மேற்கு-வடமேற்கு திசையாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த வானிலை அமைப்பால் இலங்கைக்கு நேரடி பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படாவிட்டாலும், குறித்த தாழமுக்கத்தை நோக்கிய காற்றின் ஓட்டம் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் ஓரிரு தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *