முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (11) முற்பகல் 9.10 மணியளவில் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகியுள்ளார். சர்ச்சைக்குரிய மிக் (MiG) போர் ரக விமானக் கொள்முதல் கொடுக்கல்வாங்கல் தொடர்பான வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே அவருக்கு அந்தப் பிரிவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, அவர் இன்று காலை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டில் இலங்கை விமானப்படைக்காக மிக்-27 போர் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் அரச நிதியைப் பயன்படுத்தியமை தொடர்பிலேயே இந்த விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, குறித்த மிக் போர் விமானக் கொடுக்கல்வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் (ஓய்வு பெற்ற) ரொஷான் குணதிலக்க நேற்று (10) முற்பகல் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார். சுமார் ஐந்து மணிநேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் வழங்கிய பின்னரே அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த நிலையிலேயே, அந்த விசாரணைகளின் தொடர்ச்சியாக கோட்டாபய ராஜபக்ஷவிடமும் இன்று வாக்குமூலம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
